Published : 14 Oct 2017 09:48 AM
Last Updated : 14 Oct 2017 09:48 AM

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பட்டாசு வெடிக்கத் தடையில்லை என்றும் விளக்கம்

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. பட்டாசு வெடிக்கத் தடை இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

தீபாவளிப் பண்டிகையின்போது டெல்லியில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் டெல்லி மற்றும் சுற்று வட்டாரங்களில் பட்டாசு விற்பனைக்கு அக்டோபர் 31-ம் தேதி வரை தடை விதித்து கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பட்டாசு வியாபாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட பட்டாசுகளை விற்க அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

நேற்று இம்மனு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. பட்டாசு வியாபாரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘‘நூற்றுக்கணக்கான வருடங்களாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. டெல்லி இந்தியாவில் இருந்து வெளியே இல்லை. குழந்தைகள் தீபாவளியை கொண்டாட காத்திருக்கிறார்கள். பட்டாசு வெடிப்பதற்கு நாளையும் நேரத்தையும் நீதிமன்றம் அறிவிக்க வேணடும்’’ என்றார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

பட்டாசு வெடிக்க நாங்கள் தடை விதித்திருப்பதாக யார் சொன்னது? ஏற்கெனவே பட்டாசு விற்பனை நடந்துள்ளது. பட்டாசு வெடிக்கப்படுகிறது. இப்போது கையில் இருக்கும் பட்டாசுகளே போதும். பட்டாசு வெடிக்க தடை விதிக்கவில்லை.

டெல்லி சுற்றுவட்டாரங்களில் பட்டாசு விற்பனைக்குத்தான் இம்மாத இறுதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. எங்கள் உத்தரவுக்கு சிலர் மதச்சாயம் பூசுகின்றனர். மக்களின் நலனுக்காகத்தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது சட்டரீதியான பிரச்சினை. காற்றில் மாசுபாடு அளவில் மாற்றம் உள்ளதா என, தீபாவளிக்குப் பிறகான நிலைமையை நவம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு நீதிமன்றம் ஆராயும்.

இவ்வாறு கூறிய நீதிபதிகள் பட்டாசு வியாபாரிகள் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x