Last Updated : 10 Oct, 2017 06:52 AM

 

Published : 10 Oct 2017 06:52 AM
Last Updated : 10 Oct 2017 06:52 AM

சசிகலாவின் சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்திய‌ கைதிகள் சிறையில் தாக்கப்பட்டது உண்மை: மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்திருக்கிறார் என முன்னாள் டிஐஜி ரூபா கடந்த ஜூலை மாதம் புகார் தெரிவித்தார். அப்போது சிறையில் சசிகலா, தெல்கி உள்ளிட்ட விஐபி கைதிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு வசதிகள் தொடர்பாக கைதிகள் ரூபாவிடம் புகார் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார், அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் கைதிகளை சரமாரியாக தாக்கினர். சிறையில் உள்ள ரவுடிகளை வைத்தும் புகார் அளித்த கைதிகளை தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த விவகாரத்தை கர்நாடக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. அதன்பின், ஐ.ஜி.பி. சவுமீன்ட் முகர்ஜி, 72 பக்க அறிக்கையை மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், “சிறையில் சசிகலா, இளவரசி, தெல்கி உள்ளிட்ட விஐபி கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சிறப்பு வசதிகளை பெற்றுள்ளனர். இதை டிஐஜி ரூபாவிடம் தெரிவித்த 32 கைதிகளை சிறை வார்டன்களும், கைதிகளும் தாக்கியுள்ளனர். காயமடைந்த கைதிகளை நாற்காலியில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சிறையின் முன்னாள் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் வரும் 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரூபா வரவேற்பு

ஆணையத்தின் அறிக்கையை வரவேற்றுள்ள முன்னாள் டிஐஜி ரூபா, “இந்த விவகாரத்தை ஆழமாக விசாரித்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும். கைதிகளையும், என்னையும் அவசர அவசரமாக இடமாற்றம் செய்தது ஏன்? எங்களை பழிவாங்கிவிட்டு, குற்றவாளியான சசிகலாவுக்கு இப்போது பரோல் வழங்கி இருக்கிறார்கள். என்ன சொல்வதென்றே தெரிவியவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x