Last Updated : 07 Oct, 2017 08:21 AM

 

Published : 07 Oct 2017 08:21 AM
Last Updated : 07 Oct 2017 08:21 AM

கணவர் நடராஜனை பார்ப்பதற்காக 5 நாள் பரோல்: பெங்களூருவிலிருந்து சென்னை வந்தார் சசிகலா

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்து 5 நாள் பரோலில் சசிகலா நேற்று சென்னை வந்தார். 233 நாட்களுக்கு பிறகு சென்னை வந்த அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். தற்போது அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரை பார்க்க 15 நாட்கள் பரோல் கேட்டு சிறை அதிகாரியிடம் கடந்த 3-ம் தேதி சசிகலா மனு அளித்தார்.

போதிய மருத்துவ சான்றிதழ்கள், அரசு பதிவுபெற்ற அலுவலரின் கோரிக்கை கடிதம் இணைக்கப்படாததால், அவரின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டது. கடந்த 4-ம் தேதி உரிய சான்றிதழ்களை இணைத்து, புதிதாக பரோலுக்கு அவர் விண்ணப்பித்தார். இதையடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் சோமசேகர், சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா என கர்நாடக உள்துறை, சட்டத்துறை, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் கருத்துக் கேட்டார்.

இதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில்,சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஷ்வநாதனும் தடையில்லா சான்றிதழ் வழங்கினார். கர்நாடக சட்டத்துறை, சிறைத்துறை விதிமுறை களின்படி ஓராண்டு சிறை தண்டனை கூட அனுபவிக்காததால், சசிகலாவுக்கு 7 நாட்களுக்கு குறைவாக பரோல் வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கியது.

இதற்கு சசிகலா தரப்பு, நடராஜனுக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. எனவே குறைந்தபட்சம் 7 நாட்கள் அவசர பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சசி கலாவின் வழக்கறிஞர் கிருஷ்ணப்பா அவசர பரோலுக்காக மருத்துவ சான்றிதழ்கள், அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணனின் பரிந்துரை கடிதம், ரூ.1,000 கட்டணம் ஆகியவற்றை சிறையில் செலுத்தினார்.

இதையடுத்து நடராஜனை சந்திப்பதற்காக சசிகலாவுக்கு 5 நாள் அவசர பரோல் விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த 5 நாட்களில் சசிகலா அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது, ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது உள்ளிட்ட 4 நிபந்தனைகளை விதித்து சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் சோமசேகர் உத்தரவிட்டார்.

அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பகல் 12 மணியளவில் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்கு வந்தார். சென்னை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் சிறை வளாகத்தில் குவிந்தனர்.

உரிய அனுமதி பெற்று உறவினர்கள் ஷகிலா, கீர்த்தனா, ராஜராஜன் மற்றும் வழக்கறிஞர் அசோகன் ஆகியோருடன் சிறைக்குள் தினகரன் சென்றார். சுமார் 3 மணி நேரம் தினகரனுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து சசிகலா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஷகிலா, சசிகலாவுக்காக கொண்டு வந்திருந்த பச்சை நிற பட்டுப்புடவை, அணிகலன்களை அவரிடம் வழங்கினார்.

பரோலில் செல்வதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தார். சிரித்துக்கொண்டே ஆதரவாளர்களை நோக்கி கும்பிட்டார். அங்கு திரண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து வழங்கி, சசி கலாவை வாழ்த்தி முழக்கமிட்டனர்.

தினகரனின் காரின் பின்புற இருக்கையில் அமர்ந்த சசிகலாவுக்கு பாதுகாப்பாக அவரது ஆதரவாளர்கள் காரின் முன்புறம் நடந்து வந்தனர். பின்னர் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுக்க சசிகலா சாலை மார்க்கமாகவே சென்னைக்கு திரும்பினார். அங்கு தி.நகரில் உள்ள இளவரசியின் மகளின் இல்லத்தில் சசிகலா தங்குகிறார்.

233 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு சசிகலா பரோலில் சென்னை வந்ததால், அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதிமுகவில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் தற்போதைய சூழ்நிலையில், சசிகலா வெளியே வந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கூட்டங்களில் பங்கேற்க தடை

பரோல் நாட்களில் சசிகலாவுக்கு சிறைத்துறை 4 முக்கிய நிபந்தனைகளை எழுத்துபூர்வமாகவும், சில நிபந்தனைகளை வாய்மொழியாகவும் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் சோமசேகர் பிறப்பித்த எழுத்துப்பூர்வ உத்தரவில், “அவசர பரோல் காலத்தில் உங்கள் கணவர் (நடராஜன்) அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல வேண்டும். மற்ற நேரத்தில் மனுவில் குறிப்பிட்டுள்ள முகவரியில் (தி. நகரில் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில்) தங்கியிருக்க வேண்டும். மருத்துவ மனையிலும், வீட்டிலும் பார்வையாளர்களை சந்திக்க கூடாது. அரசியல் கூட்டங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், கட்சி நடவடிக்கையிலும் ஈடுபட கூடாது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக்கூடாது” என குறிப்பிட்டுள்ளது.

இதேபோல வாய்மொழியாக, ‘‘அலுவலக நேரத்தில் (காலை 9 முதல் மாலை 5 மணி வரை) மட்டுமே மருத்துவமனைக்கு சென்று நடராஜனை சந்திக்க வேண்டும். அவசர தேவைக்காக இரவு நேரத்தில் செல்வதாக இருந்தால் உள்ளூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். அரசியல் ரீதியாக எவ்வித செயல் பாடுகளிலும் ஆர்வம் காட்டக்கூடாது. சனிக்கிழமை காலை 9 மணிக்கு தி.நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். வருகிற 12-ம் தேதி மாலை 5 மணிக்குள் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திரும்ப வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x