Last Updated : 29 Sep, 2017 11:27 AM

 

Published : 29 Sep 2017 11:27 AM
Last Updated : 29 Sep 2017 11:27 AM

பெங்களூரு மேயராக தமிழர் தேர்வு:கர்நாடக தமிழ் அமைப்பினர் வாழ்த்து

பெங்களூரு மாநகராட்சியின் 51-வது மேயராக சம்பத் ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலத்துக்கு பிறகு தமிழரான சம்பத் ராஜ் மேயராகி இருப்பதால் கர்நாடகாவில் தமிழ் அமைப்பினரும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பாஜக 100, காங்கிரஸ் 76, மதச்சார்பற்ற ஜனதா தளம் 14, சுயேச்சைகள் 7 இடங்களை கைப்பற்றின. இதில் காங்கிரஸ் கட்சி, மஜத மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் மேயர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக மேயர் பதவியை வகித்த பத்மாவதியின் பதவி காலம் அண்மையில் நிறைவடைந்தது.

இதையடுத்து பெங்களூரு மாநகராட்சியின் மேயர் (எஸ்.சி), துணை மேயர் (பொது) பதவிக்கான தேர்தல் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி சார்பில் சம்பத் ராஜ் (காங்கிரஸ்) மேயர் பதவிக்கும், பத்மாவதி (மஜத) துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டனர். பாஜக சார்பாக முனுசாமியும், மம்தா வாசுதேவும் அவர்களை எதிர்த்து களத்தில் இறங்கினர்.

இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பாஜக உறுப்பினர்கள் மாநகராட்சியில் நடந்த முறைகேடுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் மேயர் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து நடந்த வாக்குப்பதிவில் 139 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று காங்கிரஸை சேர்ந்த சம்பத் ராஜ் வெற்றிபெற்றார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பத்மாவதி துணை மேயராக தேர்வானார்.

கேசவ ஐயங்கார், கிருஷ்ண ஐயர், குப்புசாமி, சுந்தர மூர்த்தியை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு மேயராக தமிழரான சம்பத் ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஷிமோகா மேயராக தமிழரான ஏழுமலை வெற்றி பெற்றநிலையில், பெங்களூரு மேயராக சம்பத் ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய குடியரசு கட்சி துணைத் தலைவர் துரை சாமி, கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் சி.ராசன், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் மீனாட்சி சுந்தரன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x