Last Updated : 27 Sep, 2017 07:45 PM

 

Published : 27 Sep 2017 07:45 PM
Last Updated : 27 Sep 2017 07:45 PM

அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசினார் யஷ்வந்த் சின்ஹா: ப.சிதம்பரம் மகிழ்ச்சி

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்தி ஒன்றில் முன்னாள் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்று பாஜக மீதே கடும் விமர்சனம் வைத்ததை ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா தன் பத்தியில், “பொருளாதாரத்திற்கு அருண் ஜேட்லி செய்ததை நான் இப்போது கூட வாயைத் திறக்காமல் இருந்தால் நான் எனது தேசியக் கடமையிலிருந்து தவறுபவனாகி விடுவேன், நான் கூறப்போவது பாஜகவில் உள்ளவர்களுக்கே நன்கு தெரிந்ததுதான், ஆனால் இவர்கள் பயத்தின் காரணமாக வெளிப்படையாகப் பேசுவதில்லை” என்று தன் பத்தியை ஆரம்பித்து நடப்பு பொருளாதாரக் கொள்கைகளின் முகமூடியைக் கிழித்து எறிந்தார்.

சின்ஹாவின் இந்த விமர்சனம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “சின்ஹா அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசியுள்ளார், மத்திய அரசு எத்தனை நாட்களுக்கு பிரதமர் மோடியின் ஜோடனை வார்த்தைகளுக்கும் கட்சிக் கோஷங்களுக்கிடையேயும் தன்னை மறைத்து கொள்ளப் போகிறது?

இதே பலவீனங்களை காங்கிரஸ் சுட்டிக்காட்டியபோது எங்கள் வாயை அடைத்தனர். ஆனால் காங்கிரஸ் தொடர்ந்து நடப்பு ஆட்சியின் பேரழிவுப் பாதையை உரக்கவும் தைரியமாகவும் பேசவே செய்யும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது, அரசு மக்களைச் சுரண்டுகிறது. யஸ்வந்த் சின்ஹா உண்மையைப் பேசியதில் மகிழ்ச்சி. பொருளாதாரம் பற்றிய எங்கள் பார்வைகளை அவர் எதிரொலித்தார். அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசியுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று இந்த அரசால் சுத்தமாகக் கணிக்க முடியவில்லை.

சின்ஹாவின் கருத்தை அரசியல் செய்ய பயன்படுத்தவில்லை, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுடன் சின்ஹாவின் பார்வை ஒருங்கிணைந்துள்ளது.

புதிய பொருளாதார ஆலோசனைக் குழு அமைத்திருப்பது உடைந்த பல உறுப்புகளுக்கு கட்டுப் போடுவது போன்றதுதான்.

நம் காலத்தின் துயரத்தை சின்ஹா வர்ணித்துள்ளார் என்றே நினைக்கிறேன், எம்பிக்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது, தாங்கள் கேள்விப்படுவது ஆகியவை பற்றி எதையும் பேச முடியவில்லை, அவர்கள் பயப்படுகின்றனர், ஆனால் நாம் நம்மை சுதந்திர நாடு என்று அழைத்துக் கொள்கிறோம், என்றார் ப.சிதம்பரம்.

யஷ்வந்த் சின்ஹா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில் நிதியமைச்சர் பொறுப்பு என்பது மிகவும் கடினமான ஒரு பணி என்று தன் அனுபவத்தையும் உள்ளடக்கி கூறும்போது

“நிதியமைச்சர் பொறுப்பு என்பது 24/7 பணியாகும் ஆனால் நிதியமைச்சர் அருண் ஜேட்லி முதலீட்டு நீக்கத் துறை, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரம் ஆகிய துறைகளைக் கூடுதலாகக் கவனித்து வந்தார்” என்று விமர்சித்தார்.

மேலும், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகச் சரிவு கண்ட போது அதன் பயன்களை மக்களுக்கு மத்திய அரசு அளிக்கவில்லை என்று பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.  இப்போது பெட்ரோல் டீசல் விலை தினசரி முடிவு செய்யப்பட்டு விலை உயர்ந்து வருகிறது.

இது பற்றிய தனது பார்வையில் யஸ்வந்த் சின்ஹா,  ”அருண் ஜேட்லி அதிர்ஷ்டகரமான ஒரு நிதியமைச்சர். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு அதன் மூலம் லட்சம் கோடி கணக்கான தொகை மத்திய அரசின் கையில் இருந்தது, ஆனால் இந்தத் தொகை கற்பனை வளத்துடன் பயன்படுத்தப்படவில்லை. கச்சா எண்ணை விலைசரிவினால் கிடைத்த ஊக்கம் விரயம் செய்யப்பட்டது” என்றார்.

இன்று இந்தியப் பொருளாதாரத்தின் சித்திரம் என்ன?  என்று பலரும் தங்கள் கருத்தைக் கூறிவருகையில், யஸ்வந்த் சின்ஹா அத்தகைய எதிர்க்கருத்துகளை ஊர்ஜிதம் செய்யும் விதமாக உற்பத்தித் துறை, கட்டுமானம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைத்துறைகள், ஏற்றுமதி அனைத்தையும் விட விவசாயத்தின் நிலை ஆகியவை கடும் சரிவுக்குள்ளாகி எண்ணற்ற லட்சக்கணககானவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர் என்று சாடினார்.

பொருளாதார வளர்ச்சி விகிதம் கணக்கிடும் முறை 2015-ம் ஆண்டில் நடப்பு அரசினால் மாற்றியமைக்கப்பட்டது என்றும் இந்தக் கணக்கீட்டின் படி கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.7% என்று நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறிய யஸ்வந்த் சின்ஹா, 2015-க்கு முன்பாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணக்கிடும் முறைப்படி பார்த்தால் கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 3.7% தான் என்று ஒரே போடாகப் போட்டார்.

புதிய ஜிஎஸ்டியின் கீழ் வரி உள்ளீட்டு வரவு (input tax credit) தற்போது ரூ.95,000 கோடி என்றால் அந்தந்த தொழிற்துறையினர் கட்டிய கூடுதல்வரியை அரசு அவர்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய தொகை மிகப்பெரிதான ரூ.65,000 கோடியாக உள்ளது., என்று கூறும் சின்ஹா,  ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஆய பயன் என்ன என்று சூசகமாகக் கேள்வி எழுப்புகிறார்.

மேலும்,  2019 மட்டுமல்ல 2023 வரை பாஜகவை அசைக்க முடியாது என்று அக்கட்சியின் அமித் ஷா உள்ளிட்டவர்கள் கூறி வரும் நிலையில் சின்ஹா கூறுவது என்னவெனில்  அடுத்த லோக்சபா தேர்தலுக்குள் பொருளாதாரம் மீள்வது சாத்தியமல்ல என்று திட்டவட்டமாக அந்தப் பத்தியில் கூறியுள்ளார்.

ஏழ்மையை மிக அருகில் இருந்து தான் பார்த்ததாகவும் அதனால் ஏழ்மை பற்றி தனக்கு அதிகம் புரியும் என்று பிரதமர் மோடி வானொலி உரை  உள்ளிட்ட உரைகளில் கூறிவருவதைக் கண்டு பலரும் நெகிழ்ந்துள்ள நிலையில் யஸ்வந்த் சின்ஹா அருண் ஜேட்லியை முன்வைத்து விமர்சிக்கும் போது ”அனைத்து இந்திய மக்களும் ஏழ்மையை அருகில் இருந்து நெருக்கமாகப் பார்ப்பதற்காக ஓவர்-டைம் பணியாற்றி வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவரது இந்த விமர்சனத்துக்குத்தான் தற்போது ப.சிதம்பரம் ‘அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசுகிறார் சின்ஹா என்று பாராட்டியுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x