Last Updated : 23 Sep, 2017 09:37 AM

 

Published : 23 Sep 2017 09:37 AM
Last Updated : 23 Sep 2017 09:37 AM

எடியூரப்பா மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்கை ஊழல் தடுப்புத் துறை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் உற்சாகம் அடைந்த பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கடந்த 2011-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது பெங்களூருவில் சிவராம் காரந்த் லே - அவுட் அமைக்க 3,546 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அடுத்த சில மாதங்களில் எடியூரப்பா அதில் 257 ஏக்கர் நிலத்தை விடுவித்து அரசாணை வெளியிட்டார். இந்த நிலத்தை எடியூரப்பாவின் குடும்பத்தாரும், ஆதரவாளர்களும் ஆக்கிரமித்ததாக சமூக ஆர்வலர் ஐயப்பா புகார் தெரிவித்தார்.

இதையடுத்து ஊழல் தடுப்பு துறை போலீஸார் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி எடியூரப்பாவுக்கு எதிராக 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். கர்நாடக பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது,

இந்நிலையில் எடியூரப்பா தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகளை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இம்மனு நேற்று விசாரணைக்கு வந்த போது எடியூரப்பா சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ், “எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.அரசியல் உள்நோக்கத்துடனும், எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்கும் நோக்கத்துடனும் இவ்வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே எடியூரப்பா மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி அரவிந்த்குமார், “எடியூரப்பா அரசு நிலத்தை விடுவித்து 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது திடீரென வழக்கு பதிவு செய்தது ஏன்? இந்த காலதாமதம் ஊழல் தடுப்பு துறையின் நடவடிக்கை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம், போதிய ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் எடியூரப்பாவுக்கு எதிராக ஊழல் தடுப்புத்துறை விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. எனவே இவ்வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை விதிக்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x