Published : 19 Sep 2017 03:21 PM
Last Updated : 19 Sep 2017 03:21 PM

போலி நிறுவனங்களின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு

போலிநிறுவனங்களைத் தொடங்கி நிதி மோசடிகளில் ஈடுபட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் பட்டியலை மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் நாட்டின் முதல் முறை நடவடிக்கையாக வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் அரசியல்வாதிகள் மற்றும் வளைகுடா நாட்டு தொழிலதிபர் பெயர்களும் அடங்கியுள்ளது.

இந்தப் பட்டியலில் முன்னாள் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி, சிறையில் உள்ள சசிகலா, கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, வளைகுடாவைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஏ.யூசுஃபலி உள்ளிட்டோர் அடங்குவர்.

சசிகலாவுடன் தொடர்புடைய 4 போலி நிறுவனங்களை முடக்கியுள்ளார் நிறுவனப் பதிவாளர்.

இத்தகைய போலி நிறுவனங்கள், அதாவது ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1.06 லட்சம் இயக்குநர்கள் தகுதி நீக்கத்துக்காக மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் அடையாளம் கண்டது. ஷெல் நிறுவனங்கள் அல்லது போலி நிறுவனங்கள் என்றால் எந்த ஒரு வர்த்தகமும் தொழிலும் நடக்காமல் நிதிமுறைகேடுகள் செய்வதற்கென்றே தொடங்கப்பட்ட நிறுவனங்களாகும். இத்தகைய நிறுவனங்களின் வலைப்பின்னலை உடைத்து கறுப்புப் பணம்/ நிதி முறைகேடு, அன்னியச் செலாவணி மோசடி ஆகியவற்றைத் தடுப்பதுதான் நோக்கம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் கேரளாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், முன்னணி அரசு ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு போலி நிறுவனங்களைத் தொடங்கி அதில் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம், இங்கிருந்து 74,920 இயக்குநர்கள் அடையாளம் காணப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் 24,048, மும்பையில் 68,851, ஹைதராபாத்தில் 41,156, எர்ணாக்குளத்தில் 14,000, கட்டாக்கில் 13,383, அகமதாபாத்தில் 12,692 என்று தகுதி நீக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வளைகுடாவில் உள்ள ‘வெற்றிகரமான’ தொழிலதிபர் யூசுஃபலி நோக்ரா-ரூட்ஸ், என்ற நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டு வெளிநாடு வாழ் கேரள மாநிலத்தவருக்கு உத்திகளையும், வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தவர். சசிகலாவுக்கு தொடர்புடைய போலி நிறுவனங்களான பேன்ஸி ஸ்டீல் பிரைவேட் லிமிடெட், ரைன்போ ஏர் பிரைவேட் லிட், சுக்ரா கிளப், இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்கள் கலைக்கப்பட்டன. கடந்த மே மாதம் தி இந்து (ஆங்கிலம்) சசிகலாவுக்கு தொடர்பான இத்தகைய நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்தியது. இது தொடர்பாக மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி சசிகலா, இளவரசி, வி.குலோத்துங்கன் ஆகியோர் இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்துள்ளனர்.

புனேயில் 11,285 நிறுவனங்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 4,449 இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்த பெயர்களில் ஊழலுக்குப் பெயர் பெற்ற ஸ்மிருத்தா ஜீவன் ஃபுட்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ் மோட்வர் உள்ளார். ஆடம்பர புனே ரியல் எஸ்டேட் அதிபர், ஆக்ஸ்பர்ட் ஸ்யூட்ஸ் தனியார் நிறுவனத்தின் அனிருத்தா சியோல்கர், அந்தல்கர் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனத்தின் ஜோதி அந்தல்கர் ஆகியோர் குறிப்பிடத்தகுந்த புள்ளிகளாவர்.

பட்டியலில் உள்ள தகுதி நீக்க இயக்குநர்கள் அல்லது மூடப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு நிதி அறிக்கைகளையோ, லாப நஷ்ட கணக்குகளையோ காட்டாதவர்கள்.

இந்த நடவடிக்கையில் இதுவரை பதிவு நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 2.09 லட்சமாகும். இதில் நீக்கப்பட்ட இயக்குநர்கள் பட்டியலில் சென்னை முதலிடம் வகிக்கிறது (24,048). இம்மாதிரி பதிவு நீக்கம் செய்யப்பட்ட, அல்லது தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் வங்கிக் கணக்குகளுக்கான அதிகாரபூர்வ கையெழுத்திட தகுதியற்றவர்கள் என்று மத்திய அரசு இந்த மாதத் தொடக்கத்தில் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதே போல் வங்கிகளுக்கு இத்தகைய எச்சரிக்கை வருவதற்கு முன்பாக பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற இயக்குநர்கள் மீதும் நடவடிக்கை உறுதி என்று மத்திய அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தாக்கம்

கோவையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்களில் பெரும்பாலும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவர். இதில் சில நிறுவனங்கள் திவாலாகி விட்டன.

இவ்வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஹை-டெக் இண்டெர்னேஷனல் டிரேட் ஃபேர் நிறுவனத்தின் சேர்மன் ஏ.ராயப்பன் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, “3 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு டிரேட் ஃபேர் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு நாங்கள் 2 ஆண்டுகளுக்கு பேலன்ஸ் ஷீட் சமர்ப்பிக்கவில்லை. எங்களுக்கு வங்கிக் கடன் எதுவும் கிடையாது, நாங்கள் இப்போது லாபகரமான ஒரு நிறுவனமாக இயங்கி வருகிறோம். இந்த நடவடிக்கை பர்றி எனக்குத் தெரியாது” என்றார்.

இப்படியாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பலர் இந்த முடிவை சட்ட ரீதியாக எதிர்க்கத் தயாராகி வருகின்றனர். இதே போல் திருப்பூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவன இயக்குநர் (தகுதி நீக்கம் செய்யப்பட்ட) ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்த போது, “நாங்கள் 6 ஆண்டுகளாக நிறுவனத்தை நடத்தவில்லை. இதனை நாங்கள் நிறுவனப் பதிவாளரிடமும் தெரிவித்து விட்டோம். இந்த நிறுவனம் சார்ந்த பிரச்சினையால்தான் எங்களது ஒட்டுமொத்த வர்த்தகமும் வீழ்ச்சி அடைந்தது. இப்போது பதிவாளர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நாங்கள் எங்கள் ஆடிட்டரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்வோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x