Published : 05 Sep 2017 10:09 PM
Last Updated : 05 Sep 2017 10:09 PM

பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொலை

 

பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்லேஷ் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

'லங்கேஷ் பத்ரிகே' என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர் வகுப்பு வாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால் இந்துத்துவ அமைப்புகள் கௌரி லங்கேஷ் மீது அவதூறு வழக்குகளை தொடர்ந்தன.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட‌ போலி என்கவுன்ட்டர்கள் குறித்து ராணா அய்யூப் எழுதிய புத்தகமான 'குஜராத் ஃபைல்ஸ்' நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார்.

அச்சமின்றி இடைவிடாது பத்திரிகைப் பணியில் இயங்கிக் கொண்டிருந்த கௌரி லங்கேஷை அவரது வீட்டு வாசலில் நான்கு மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து மனித உரிமை செயற்பாட்டாளார் மார்க்ஸ் முகநூலில் வெளியிட்ட பதிவில், ''கௌரி லங்கேஷ் மனித உரிமைகள் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் (NCHRO) முதல் செயற்குழுவில் உறுப்பினராக இருந்தவர். அது தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டவர். அவர்மீது ஏராளமான அவதூறு வழக்குகளை இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்திருந்தன.

துணிச்சலும் நேர்மையும் மிக்க கௌரி லங்கேஷ் பல இதழ்களில் பத்திகளும் எழுதிக் கொண்டிருந்தார். அவரது படுகொலை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. நான்கு கொலையாளிகள் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி (77) 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி மர்ம நபர்க ளால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டது நினைவு கூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x