Last Updated : 24 Aug, 2017 11:36 AM

 

Published : 24 Aug 2017 11:36 AM
Last Updated : 24 Aug 2017 11:36 AM

தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமையே: ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

 

இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆதாரைக் கட்டாயமாக்கும் திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா? என்பது குறித்த வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

முன்னதாக, சமையல் எரிவாயு, மதிய உணவு, முதியோர் ஓய்வூதியம், வங்கி சேவை மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டன.

இத்திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முன் தனிநபர் சுதந்திரம் குறித்து எம்.பி.சர்மா மற்றும் கரக்சிங் வழக்குகளில் 8 நீதிபதிகள் வரை அடங்கிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், இதுகுறித்து கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதுகுறித்து முடிவெடுப்பதற்காக தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், ஜெ.சலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அப்துல் நசீர், ஆர்.கே.அகர்வால், ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.சாப்ரே, எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (ஆகஸ்ட் 24ம் தேதி) தீர்ப்பு வழங்கியது. 9 நீதிபதிகளுமே தனிநபர் ரகசியம் என்பது அரசியல் சாசன சட்டப்பிரிவு 21ன் படி அடிப்படை உரிமையே என ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆதாரைக் கட்டாயமாக்கி மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்திவரும் நிலையில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தனிநபர் சுதந்திரம் குறித்த முந்தைய வழக்கும்... தீர்ப்பும்...

எம்.பி.சர்மா எதிர் சதிஷ் சந்திரா வழக்கு(15.3.1954):

ஒருவருடைய தொழில் நிறுவனம் போலீஸாரால் சோதனையிடப்பட்டு அவரது நிறுவன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தனிநபர் சுதந்திரத்தை மீறிய செயல் என்று வழக்கு தொடர்ந்தார்.

பி.ஜெகன்னாததாஸ் தலைமை யிலான 8 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து தனிநபர் சுதந்திரம் என்பது முழு மையான அடிப்படை உரிமையல்ல. ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் அவரை சோதனையிட்டு ஆவணங்களைப் பறிமுதல் செய்வது சட்டப்படி சரி. இது தற்காலிக நடவடிக்கைதான் என்று தீர்ப்பளித்தது.

கரக்சிங் எதிர் உத்தரபிரதேச மாநில அரசு(18.12.1962):

கொள்ளை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ஒருவர் ஆதாரம் இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டார். அவர் மீது குற்றப் பின்னணி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அவரை கண்காணிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதை எதிர்த்து தனது அடிப்படை சுதந்திரம் பறிபோவதாக அவர் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி என்.ராஜகோபால அய்யங்கார் தலைமையிலான 6 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் குடிமகனின் அடிப்படை உரிமை மீறப்படவில்லை. போலீஸ் கண்காணிப்பில் உள்ள ஒருவரது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது நியாயமான, சட்டப்பூர்வமான நடவடிக்கைதான். அதேசமயம், அவரது வீட்டில் நுழைந்து நள்ளிரவில் சோதனையிடுதல் போன்றவை ரத்து செய்யப் படுகிறது என்று தீர்ப்பளித்தது.

வழக்கறிஞர் அய்யனாரப்பன் கூறும்போது, ‘தனிநபர் உரிமை என்பது அவரைப் பற்றிய தனிப் பட்ட தகவல்களைப் பொதுவாக பயன் படுத்துவதில் இருந்து பாதுகாப்ப தாகும். அவரது தனிப்பட்ட தகவல் கள் தனிப்பட்டதாகவே இருக்க அனுமதிக்க வேண்டும். அமெரிக்காவைப் போல் இந்தியாவில் தனிநபர் உரிமை பாதுகாப்புச் சட்டம் எது வும் இல்லை. நாட்டு மக்களின் தகவல்கள் அரசு மற்றும் கார்ப்ப ரேட் நிறுவனங்களால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆதார் தகவல்களை மத்திய அடையாள ஆவண தொகுப்பகம் (சிஐடிஆர்) தான் பாதுகாக்கிறது. இங்கிருந்து தகவல்கள் கசிய வாய்ப்புகள் அதிகம். உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதுகுறித்து முடிவெடுத்தால், தொலைபேசி ஒட்டுக்கேட்பு, கேமரா மூலம் கண்காணிப்பது போன்றவற்றிலும் தீர்ப்பின் தாக்கம் இருக்கும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x