Last Updated : 22 Aug, 2017 08:24 AM

 

Published : 22 Aug 2017 08:24 AM
Last Updated : 22 Aug 2017 08:24 AM

சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்றாரா? - வீடியோ குறித்து அதிகாரிகளிடம் விசாரணை: உயர்நிலை விசாரணைக் குழு தகவல்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் இருந்து வெளியில் சென்றுவிட்டு வந்தாரா என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்நிலை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சிறைத் துறை டிஐஜியாக இருந்த டி.ரூபா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக புகார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ரூபா பெங்களூரு மாநகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சசிகலாவின் சிறை முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்நிலை விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த குழு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள், கைதிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் ரூபா கடந்த சனிக்கிழமை வினய்குமார் தலைமையிலான உயர்நிலை விசாரணை குழுவுக்கு, 12 பக்க அறிக்கையும், புகைப்பட, வீடியோ உள்ளிட்ட 74 ஆதாரங்களை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், “வண்ண உடை அணிந்துள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் அதிகாரிகளின் உதவியுடன் சிறை விதிமுறைகளை மீறியுள்ளனர். சிறையில் இருந்து வெளியே சென்று பைகளுடன் திரும்பும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பிரதான நுழைவாயில் அருகே எடுக்கப்பட்ட இந்த காட்சிகளில் ஆண் காவலர்களும், ஆண் கைதிகளும் இடம்பெற்றுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

உரிய விசாரணை தேவை

இந்த செய்தி நேற்று ‘தி இந்து’ வில் வெளியாகியதை தொடர்ந்து கர்நாடக அரசியல் வட்டாரத்திலும், காவல் துறையிலும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக முன்னாள் துணை முதல்வர் அசோக், ‘‘இந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளியான சசிகலாவுக்கு சலுகை காட்டிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா என வினய்குமார் தலைமையிலான விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் ''என்றார்.

சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ்.மேக்ரிக் நேற்று சிறைக்கு சென்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது சசிகலா, தெல்கி ஆகியோருக்கு சிறப்பு சலுகை காட்டப்படுகிறதா? விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார். எக் காரணம் கொண்டும் அதிகாரிகள் சிறை விதிமுறைகளை மீறக்கூடாது என எச்சரித்ததாக தெரி கிறது.

இந்நிலையில் வினய்குமார் தலைமையிலான விசாரணை குழு, “முன்னாள் டிஐஜி ரூபா கொடுத்துள்ள 74 ஆதாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இதில் கோடிக் கணக்கில் ஊழல் நடந்துள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும். அனைத்து கட்ட விசாரணையும் நிறைவடைந்த பிறகு முதல்வர் சித்தராமையாவிடம் எங்களது இறுதி அறிக்கையை அளிப் போம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x