Last Updated : 21 Aug, 2017 09:04 AM

 

Published : 21 Aug 2017 09:04 AM
Last Updated : 21 Aug 2017 09:04 AM

பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி சிறைக்கு வெளியே சென்று திரும்பியதற்கான புதிய வீடியோ ஆதாரம்: கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம் டிஐஜி ரூபா அளித்தார்

அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் பிரதான வாயிலில் கையில் பைகளுடன் நுழையும் வீடியோ பதிவை கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம், ஐபிஎஸ் அதிகாரி ரூபா அளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும், போலி முத்திரைத் தாள் மோசடியில் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் தெல்கிக்கும் விதிகளை மீறி அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ள தகவல் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபாவின் ஆய்வில் தெரியவந்தது.

இதுதொடர்பான அறிக்கை மற்றும் 74 ஆதாரங்களையும் அப்போது சிறைத்துறை டிஜிபியாக இருந்த எச்.என்.சத்தியநாராயண ராவிடம் வழங்கினார். இது தொடர்பாக தொலைக்காட்சிகளில் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரூபா பெங்களூரு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவிடம், புதிய வீடியோ ஆதாரம் ஒன்றை ரூபா அளித்துள்ளார்.

சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், மத்திய சிறை வளாகத்தில் இருந்து உயர் அதிகாரிகளின் உதவியுடன், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வெளியில் சென்று திரும்பும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

புகைப்படம், வீடியோ

இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, ‘சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா ஓய்வு பெற்ற ஜூலை 31-ம் தேதி ரூபாவுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ஊழல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. அவர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்த சில நாட்களுக்குப் பின், அவரிடம் சில கேள்விகளுக்கு விளக்கம் கோரினர். கடந்த சனிக்கிழமை கேள்விகளுக்கு விளக்கம் மற்றும் சில புகைப்படம், வீடியோ ஆதாரங்களையும் அவர் அளித்தார்.

இதுதொடர்பாக, ரூபாவை ‘தி இந்து’ வில் இருந்து தொடர்பு கொண்டபோது, அவர் சனிக்கிழமை ஆதாரங்களை அளித்ததை ஒப்புக்கொண்டார். மேலும், அந்த வீடியோ ஆதாரத்தில், சசிகலா, இளவரசி ஆகியோர் சில பைகளுடன், சிறையின் பிரதான வாயிலில் ஆண் காவலர்கள் முன்னிலையில் நுழைகின்றனர். அப்போது பெண்கள் சிறையின் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பாதுகாப்பாக உடன் செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பாக ரூபா கூறும்போது, ‘ஆண் காவலர்கள் பெண்கள் சிறை வளாகத்துக்குள் செல்ல அனுமதியில்லை. அவர்கள் பெண்கள் சிறையின் வெளியில் பிரதான வாயிலில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். எங்கிருந்து சசிகலா வந்தார். அவரை யார் அனுமதித்தார்கள் என்பது விசாரிக்கப்பட வேண்டும்’ என்றார்.

பண ஆதாயம்

தற்போது விசாரணை ஆணையத்தின் தலைவரான வினய்குமாருக்கு இந்த வீடியோ விவகாரம் தெரியுமா என்ற கேள்விக்கு, ‘சிறைத்துறையின் தரவு தளத்தில் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. பண ஆதாயத்துக்காக குற்றவாளிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது குறித்து அதன் மூலம் தெளிவாகும். இது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றமுமாகும். பெண்கள் சிறையின் உள்ளும், வெளியிலும் ஆண் காவலர்கள் இல்லை. எனவே, வெளியில் உள்ள சாலையில் இருந்து சிறைக்குள் நுழையும் பிரதான வாயில் வழியாகத்தான் இவர்கள் வந்துள்ளனர்.

இது தொடர்பாக நான் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு, வீடியோ ஆதாரத்தை ஆய்வு செய்து, எந்த கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு வெளியில் சென்று வந்தனர் என்பதை விசாரிக்கும்படி ஊழல் தடுப்பு பிரிவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்’என்று ரூபா தெரிவித்துள்ளார்.

சிறப்பு சலுகை

ரூபா அளித்துள்ள 12 பக்க அறிக்கையில், மற்ற கைதிகள் கம்பி வலைகளுக்கு இடையில் தங்களை காண வரும் பார்வையாளர்களைச் சந்தித்து வந்த நிலையில், சசிகலாவுக்கு பார்வையாளர்களை சந்திக்கும்போது சிறப்பு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ரூபா கூறும்போது, ‘கைதிகள் பார்வையாளர்களை சந்திக்கும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில், சசிகலா எந்த ஒரு பார்வையாளரையும் சந்தித்த பதிவை காண முடியாது. எனவே, நான் சசிகலாவை சந்திக்க வந்த பார்வையாளர்களையும் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

மேலும், வினய் குமார் தலைமையிலான விசாரணை குழுவிடம், விதி மீறல்களைவிட ஊழல் நடந்துள்ள கோணத்தில் விசாரிப்பதற்கான ஆதாரத்தையும் அவர் கொடுத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய நிலவரப்படி வினய்குமார் தனது விசாரணை தொடர்பான இடைக்கால அறிக்கையை கர்நாடக முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளதாகவும், இறுதி அறிக்கை அளிக்க கால அவகாசம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடியோ ஆதாரம் வெளியானதால் கர்நாடக சிறைத்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x