Last Updated : 17 Aug, 2017 04:27 PM

 

Published : 17 Aug 2017 04:27 PM
Last Updated : 17 Aug 2017 04:27 PM

ஆர்பிஐ இன்னமும் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கிறது.. மோடிக்கு மட்டும் எங்கிருந்து தரவுகள்? - காங். கேள்வி

 

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வந்த நோட்டுகளை இன்னமும் எண்ணிக் கொண்டிருப்பதாக ஆர்பிஐ கூறிவரும்போது சுதந்திர தின உரையின் போது மோடி ரூ.3 லட்சம் கோடி இதுவரை கணக்கில் வராத தொகை, பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வந்துள்ளது என்று எப்படி கூற முடிகிறது? என்று காங்கிரஸ் தீவிர கேள்வி எழுப்பியது.

மத்திய ரிசர்வ் வங்கி இன்னமும் நோட்டுகளை எண்ணிக்கொண்டிருப்பதாகக் கூறும்போது மோடி மட்டும் எப்படி ரூ.3 லட்சம் கோடி என்று கூற முடிந்தது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பினார்.

“இதுவரை வங்கி அமைப்புக்குள் வராத, அதாவது கணக்கில் வராத ரூ.3 லட்சம் கோடி தொகை பணமதிப்பு நீக்கத்தின் மூலம் வங்கிக்குள் வந்துள்ளது என்று கூறுகிறார் மோடி. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு எவ்வளவு பணம் வந்தது என்று நாங்கள் கேட்ட போது ஆர்பிஐ இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கிறது என்ற பதிலே எங்களுக்குக் கிடைத்தது.

ஆர்பிஐ இன்னமும் எண்ணிக் கொண்டேயிருக்கிறது என்றால் பிரதமருக்கு எப்படி இந்த எண்ணிக்கை கிடைத்தது? இந்தியப் பிரதமர் மற்றும் ஆர்பிஐ முரணான இரண்டு நிலைப்பாடுகள் கொண்டது எப்படி? இது மிகப்பெரிய கேள்வி ஒன்று பிரதமர் பொய் கூற வேண்டும் இல்லையெனில் ஆர்பிஐ பொய் கூறுகிறது.

பணம் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது எனும் போது பிரதமர் எப்படி ரூ.3 லட்சம் கோடி என்று கூற முடிந்தது? நாட்டு மக்களை முட்டாளாக்குகிறாரா மோடி? இந்தத் தகவல் பிரதமரிடம் இருக்கிறது என்றால் ஆர்பிஐ ஏன் அதனை நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொள்ளவில்லை?

பிரதமர் அல்லது ஆர்பிஐ யார் பொய் கூறுகிறார்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு எது கள்ளப்பணம், எது நல்ல பணம், எது கருப்புப் பணம் என்று ஆர்பிஐ இன்னமும் பிரிக்கவில்லை எனும் போது பிரதமருக்கு மட்டும் இந்த எண்ணிக்கை எப்படி கிடைத்தது?” என்று சரமாரி கேள்வி எழுப்பினார் குலாம் நபி ஆசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x