Published : 11 Aug 2017 10:09 AM
Last Updated : 11 Aug 2017 10:09 AM

முஸ்லிம் இளைஞர் திருமண ரத்து வழக்கில் என்ஐஏ-வுக்கு உதவ வேண்டும்: கேரள போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கேரளாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞரின் திருமணம் ரத்து செய்யப்பட்ட வழக்கில் என்ஐஏ-வுக்கு உதவுமாறு மாநில போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஷபின் ஜெகன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு இந்து பெண்ணை மணந்தார். அதற்கு முன்னதாக அந்தப் பெண்ணை முஸ்லிமாக மதமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ‘லவ் ஜிஹாத்’ (காதல் வயப்படுத்தி மதமாற்றம் செய்தல்) எனக் கூறி இந்த திருமணத்தை ரத்து செய்தது. மேலும் இதுகுறித்து விசாரிக்குமாறு மாநில போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஷபின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை பார்வையிட தங்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரினார். இதற்கு ஷபின் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறும்போது, “இந்த வழக்கு தொடர்பான முழு விவரத்தையும் அறிய விரும்புகிறோம். என்ஐஏ-வை ஏன் சந்தேகிக்க வேண்டும். என்ஐஏ-வின் கோரிக்கை குறித்து ஷபின் பதில் அளிக்க வேண்டும். மேலும் என்ஐஏ-வுக்கு தேவையான உதவியை கேரள போலீஸ் செய்ய வேண்டும்” என்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x