Published : 10 Aug 2017 08:59 AM
Last Updated : 10 Aug 2017 08:59 AM

இடஒதுக்கீடு கோரி 10 லட்சம் பேர் திரண்டனர்: மராத்தா கிரந்தி மோர்ச்சா பிரம்மாண்ட பேரணி - மும்பையில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது

இடஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மராத்தா கிரந்தி மோர்ச்சா அமைப்பினர் நேற்று மும்பையில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். இதில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் மும்பை உட்பட பல இடங்கள் ஸ்தம்பித்தன. இதையடுத்து உடனடியாக சில திட்டங்களை வெளியிட்டார் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.

மகாராஷ்டிரா மாநில மக்கள் தொகையில் மராத்தா இன மக்கள் 33 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அகமத்நகர் மாவட்டம் கோபர்டி பகுதியில் மராத்தா இனத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாள்.

இதனால் மராத்தா இனத்தவர் கள் ஆத்திரம் அடைந்தனர். குற்ற வாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி அன்று முதல் தொடர்ந்து அவ்வப் போது மவுனப் போராட்டங்கள் நடத்தினர். இதுவரை மொத்தம் 57 மவுனப் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், இடஒதுக்கீடு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இறுதிக்கட்டமாக நேற்று 58-வது பிரம்மாண்ட பேரணிக்கு மராத்தா கிரந்தி மோர்ச்சா அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து திட்டமிட்டபடி நேற்று பைகுலா பகுதியில் காலை 11 மணிக்கு பேரணி தொடங்கியது. மும்பை, புனே, சாங்லி, சதாரா, கோல்ஹாபூர், சோலாபூர், தானே, பால்கர், ரெய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், துலே, ஜல்கான் உட்பட பல பகுதிகளில் இருந்து மராத்தியர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

காவி நிறத் தொப்பி அணிந்தும், கொடிகள் ஏந்தியும் மராத்தியர்கள் மும்பை ஜேஜே மேம்பாலம் வழியாக பேரணி சென்றனர். பேரணிக்கு ஆதரவு தெரிவித்து சிவசேனா அமைப்பினர் ஒட்டியிருந்த சுவரொட்டிகளை அவர்கள் கிழித்தெறிந்தனர். ‘எங்கள் போராட்டத்தில் அரசியல் தலையீடு வேண்டாம்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

பிற்பகல் ஆசாத் மைதானத்தை பேரணி சென்றடைந்தது. மைதானம் முழுவதும் மராத்தியர்கள் கடலென திரண்டனர். இதில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. ஆசாத் மைதானத்தில் திரண்டதும் அங்கு மவுன போராட்டம் நடத்தினர். அப்போது மோர்ச்சா அமைப்பினர் சத்ரபதி சிவாஜி உடை அணிந்து கொண்டனர்.

மாநிலங்களவை எம்.பி. சத்ரபதி சம்பாஜி ராஜே நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எம்.பி. என்ற முறையில் இந்த பேரணியில் பங்கேற்கவில்லை. மராத்தா இனத்தைச் சேர்ந்த சாதாரண குடிமகனாக கலந்து கொண்டேன்’’ என்றார். பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் உட்பட பிரமுகர்கள் பலரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

பேரணியால் மும்பை, தானே உட்பட பல இடங்களில் போக்கு வரத்து ஸ்தம்பித்தது. இதை யடுத்து மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக் கையாக விடுமுறை அறிவிக்கப் பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பேரணியை முன்னிட்டு போலீஸார் உச்ச கட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தெற்கு மும்பை உட்பட பல இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எந்த அசம்பா விதமும் இல்லாத வகையில் பேரணி அமைதியாக நடந்து முடிந்தது என்று மும்பை போலீஸ் இணை ஆணையர் தேவன் பாரதி கூறினார்.

முதல்வர் அறிவிப்பு

பேரணி முடிந்ததும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை மராத்தா கிரந்தி மோர்ச்சா நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் பட்னாவிஸ் கூறும்போது, இட ஒதுக்கீடு கோரிக்கையை பிற்படுத் தப்பட்டோர் ஆணையத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு வரும் என்று உறுதி அளித்தார்.

பின்னர் சட்டப்பேரவையில் இதுகுறித்து முதல்வர் பட்னாவிஸ் பேசியதாவது:

மராத்தா இனத்தவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான விஷயம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுகுறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் விரைவாக சமர்ப்பிக்கும்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

மாநிலத்தில் மராத்தா இன மாணவர்களுக்கு 36 பாடப் பிரிவு களுக்கு மட்டும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட் டம் இனி 605 பாடப் பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அத்துடன் திறன் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் விவசாயிகளின் குழந்தைகள் 3 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். அதன்மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும்.

மராத்தா மாணவர்கள் தங்கு வதற்கு விடுதிகள் கட்டப்படும். அதற்கான நிலம் மற்றும் நிதியை அரசே வழங்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x