Last Updated : 03 Aug, 2017 05:16 PM

 

Published : 03 Aug 2017 05:16 PM
Last Updated : 03 Aug 2017 05:16 PM

உயிர்வாழக் கடினமாகும் அளவுக்கு தெற்காசியாவில் வெப்பநிலை அதிகரிக்கும்: ஆய்வில் எச்சரிக்கை

2100-ஆம் ஆண்டில் நாட்டில் வெப்ப அலைகள் அதிகரித்து வாழ முடியாத நிலைக்கும் செல்லும் என்று ‘சயன்ஸ் அட்வான்சஸ்’ என்ற இதழில் வெளியான ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

குறிப்பாக கங்கைநதிப் படுகையில் அடர்த்தியான மக்கள் தொகை நிரம்பிய பகுதிகள் இதில் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

அதிக வெப்ப அளவு மற்றும் காற்றில் ஈரப்பதம் இரண்டும் கலந்து மனித உடல் தன்னைத்தானே வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளும் உடல் தகுதி இழக்கப்பட்டு நோய்களும், மரண எண்ணிக்கை விகிதங்களும், அறிதல் திறன் குறைபாடுகளும் தோன்றும் என்று இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

அதாவது ஈரப்பதம் சேராத வெப்பநிலை வேறு, ஈரப்பதம் சேர்ந்த வெப்ப நிலை வேறு, இந்தக் கணக்கீட்டின்படி டிரை பல்ப் டெம்பரேச்சர், வெட் பல்ப் டெம்பரேச்சர் என்று இருபிரிவுகள் உள்ளன. இதில் வெட் பல்ப் வெப்பநிலை என்பது காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஆவியாக்கச் செய்த பிறகு கிடைக்கும் குறைந்தபட்ச வெப்ப நிலையாகும். (இது மிகவும் குறைந்தபட்ச விளக்கமே, இந்த கருத்தாக்கம் மேலும் சிக்கல் நிரம்பியது என்பது குறிப்பிடத்தக்கது)

இந்த வெப்பநிலையைத்தான் ஆய்வாளர்கள் வெட் பல்ப் டெம்பரேச்சர் என்று அழைக்கின்றனர். இந்த வெட் பல்ப் டெம்பரேச்சர் என்ற குறைந்தபட்ச வெப்பநிலை 2100-ம் ஆண்டு வாக்கில் 35 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும், இதுதான் ஆபத்தானது என்கிறது இந்த ஆய்வு.

இத்தகைய சூழலில் நல்ல காற்று வசதி இருந்தும், நல்ல நிழல் வசதி இருந்தும், நல்ல உடல்நிலையில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட மரணமடையும் வாய்ப்புள்ளது.

கங்கைநதிக்கரை பகுதிகள், வடகிழக்கு இந்தியா, இந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதி, சோட்டா நாக்பூர் பீடபூமி, பாகிஸ்தானின் சிந்து சமவெளிப்பகுதி ஆகியவை வெப்ப நிலை அதிகரிப்பின் தாக்கங்கள் ஏற்பட்டு மனித உயிருக்கு அதி ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்கிறது இந்த ஆய்வு.

சிந்து சமவெளி மற்றும் கங்கைநதிப் படுகைப் பகுதிகள் மிகுந்த அபாயத்தில் உள்ளன, காரணம், பருவநிலை வெப்ப மற்றும் ஈரப்பதம் மிகுந்தக் காற்றை இப்பகுதிக்குள் கொண்டு செலுத்தும், மேற்பரப்பு காற்று உஷ்ணம் அதிகரிக்கும்.

நகர்ப்புறங்களில் அதிக மக்கள் தொகை உள்ள இடங்களிலும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் திறந்த வெளிகளில் பணியாற்றும் சூழலும், வறுமையும் இப்பகுதி மக்களை இந்தத் தாக்கத்துக்கு பாதிப்படைபவர்களாக மாற்றிவிடும்.

குறிப்பாக இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பயங்கரமான வெப்ப அலைகள் உருவாவதன் இடைவெளி குறைந்து வருகிறது. ஒடிசாவில் 1998-ம் ஆண்டு, ஆந்திராவில் 2003-ம் ஆண்டு, குஜராத்தில் 2010-ம் ஆண்டு அதிகமான வெப்ப அலை அளவு பதிவாகியுள்ளது. 2015-ல் 5-வது பயங்கர வெப்ப அலைகள் ஏற்பட்டு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் 3,500 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x