Published : 26 Jul 2017 03:44 PM
Last Updated : 26 Jul 2017 03:44 PM

கேள்வி நேரம் தொலைக்காட்சி கேமராக்களுக்கானதல்ல: ஜேட்லி கருத்தினால் மாநிலங்களவையில் அமளி

நாடாளுமன்ற கேள்வி நேரம் என்பது தொலைக்காட்சி கேமராக்களுக்கான நேரமல்ல என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதற்கு பல்வேறு எதிர்கட்சிகளும் கண்டனக்குரல் எழுப்ப அவை 3 முறை தள்ளி வைக்கப்பட்டது.

அவைத்தலைவர் இந்த கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

புதனன்று மாநிலங்களவை நிகழ்வுகள் தொடங்கியபோது எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் பலர் விதி 267-ன் படி பல்வேறு விவகாரங்களை எழுப்ப விரும்பினர், துணைத் தலைவர் பி.ஜே.குரியன் இவர்களைப் பேச அனுமதித்தார் ஆனால் அவர்களின் பாயிண்ட் ஆஃப் ஆர்டர்களை நிராகரித்தார்.

இந்நிலையில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் ஒரு விவகாரத்தை எழுப்பினார், சம்ஜவுதா ரகசிய டேப் விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், இது 2007 குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு பற்றியதாகும், இதற்கு டிரஷரி பெஞ்ச் உறுப்பினர்களும் சிலர் ஆதரவு தெரிவித்தனர்.

இதில் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் அதிருப்தி அடைந்து விவாதத்திற்கு எதை எடுத்துக் கொள்வது என்பது அவைச் செயலருடன் கலந்தாலோசித்த பிறகு அரசின் முடிவு சார்ந்தது இது “நீங்கள் எப்படி முடிவெடுக்கலாம்?” என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, மதன்மோகன் மாளவியா நூற்றாண்டு விழா எடுக்கும் அரசு ஏன் நேரு, இந்திரா காந்தி ஆகியோரை புறக்கணிக்கிறது என்ற விவகாரத்தை எழுப்பினார்.

அப்போது அருண் ஜேட்லி குறுக்கிட்டு, “இங்கு எழுப்பப்படும் பெரும்பாலான விவகாரங்கள் விதி 267-ன் படியும் அல்ல பாயிண்ட் ஆஃப் ஆர்டர் படியும் அல்ல. விதி 267 துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. கேள்வி நேரத்தை தொலைக்காட்சி கேமராக்களுக்காக நடத்த முடியாது” என்றார்.

இதனையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு ஜேட்லியின் கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூக்குரல் எழுப்பினர்.

டி.ராஜா, திருச்சி சிவா ஆகியோரும் எதிர்க்கட்சிகள் சார்பாக குரல் கொடுத்தனர். இதனையடுத்து இவர்களைக் கண்டித்த குரியன் அவையை ஒத்தி வைத்தார்.

மீண்டும் கூடிய போது ஜேட்லியின் கருத்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சி எம்பிக்கள் கோர, அவைத்தலைவர் ஹமித் அன்சாரி, தலைவராக இருந்த குரியன் ஏற்கெனவே நடவடிக்கை எடுப்பதாகக்கூறியுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் இதற்கும் எம்.பி.க்கல் எதிர்ப்பு தெரிவிக்க மீண்டும் அவை தள்ளி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x