Last Updated : 23 Jul, 2017 09:22 AM

 

Published : 23 Jul 2017 09:22 AM
Last Updated : 23 Jul 2017 09:22 AM

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு அனைத்து சலுகைகளும் ரத்து: கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக் தகவல்

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட் டுள்ள அதிமுக (அம்மா) பொதுச்செய லாளர் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பு சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக சிறைத்துறையின் கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக் கப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சமாக கொடுத்துள்ளார். இதனால் சசிகலாவுக்கு சிறப்பு சமையலறை, சமையலர், உதவியாளர்கள் உள்ளிட்ட‌ சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக அப்போதைய டிஐஜி ரூபா டி. மவுட்கில் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து டிஜிபி சத்தியநாராய‌ணராவ், டிஐஜி ரூபா டி. மவுட்கில், தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா ராய் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சிறைத்துறைக்கு புதிய கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள என்.எஸ்.மேக்ரிக், பெங்களூருவில் நேற்று ‘தி இந்து’வுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

சிறையில் சசிகலா சீருடை அணியாமல் வண்ண உடைகளில் வலம் வருவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. சசிகலா இப்போதும் சிறையில் அதே உடைதான் அணிகிறாரா?

நான் பொறுப்பேற்ற பிறகு இருமுறை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்தேன். அப்போது அனைத்து கைதிகளும் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறேன். எனவே சசிகலா இப்போது சிறையின் சீருடையைத்தான் அணிகிறார்.

நீங்கள் சசிகலாவின் அறையில் சோதனை நடத்தினீர்களா? ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? சசிகலாவிடம் பேசினீர்களா?

நான் அங்கு செல்லவில்லை. எனக்கு முன்பாக இருந்த அதிகாரிகள் சோதனை செய்து, சில பொருட்களை கைப்பற்றியதாகத் தெரிகிறது.

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக முன்னாள் டிஐஜி ரூபா குற்றம்சாட்டி இருக்கிறாரே?

அந்த புகார் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. முன்பு சசிகலாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் தற்போது பறிக்கப்பட்டுள்ளன. சசிகலா சாதாரண கைதிகளைப் போலவே சீருடை அணிந்து, சிறையில் வழங்கப்படும் உணவையே சாப்பிடுகிறார். தனியாக சமைக்கவோ, உதவியாளர்களோ அனுமதிக்கப்படவில்லை. மற்ற கைதி களுக்கு வழங்கப்படும் சலுகைகளே சசிகலாவுக்கு வழங்கப்படுகிறது.

முந்தைய சிறை அதிகாரிகள் சசிகலா வுக்கு சிறப்பு சலுகை வழங்கியதாக நீங்கள் கர்நாடக சட்டப்பேரவையின் பொதுக் கணக்கு குழுவில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறீர்களே?

அது ஒட்டுமொத்த சிறை முறைகேடு தொடர்பான எனது அறிக்கை. குறிப்பாக சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக எனக்கு கிடைத்த தகவல்களை உறுதி செய்து தாக்கல் செய்தேன். ஆனால் ஊடகங்கள் சசிகலா விவகாரத்தை மட்டும் பெரிதுபடுத்திவிட்டன.

சிறையில் விதிமுறையை மீறி சசிகலா அதிக அளவில் பார்வையாளர்களை சந்தித்து வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது. அதிலும் அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்து சந்திப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதே?

நான் பொறுப்பேற்ற பிறகு சசிகலா இதுவரை ஒருவரைக்கூட சந்திக்க வில்லை என நினைக்கிறேன். அண்மை யில் டிடிவி. தினகரன் அலுவலக நேரம் முடிந்த பிறகு வந்தபோதுகூட, சசிகலாவை சந்திக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டோம். மற்ற தண்டனை கைதிகள் சிறை விதிமுறை யின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். அதன்படியே சசிகலாவையும் அனுமதிப்போம்.

சிறை முறைகேட்டை விசாரிக்கும் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழுவினர் உங்களிடம் ஏதேனும் உதவி கோரினார்களா?

அலுவலக ரீதியான உதவிகளை கோரி னார்கள். சிறையில் ஆய்வு செய்வதற்கும், டிஜிபி அலுவலகத்தில் விசாரணை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்கள். எங்களது தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்திருக்கிறேன்.

சிறைத் துறையில் முறைகேடுகளை தவிர்க்க என்னென்ன மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளீர்கள்?

பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள், செயல்பாடு உள்ளிட்டவை தொடர்பாக ஆராய்ந்து வருகிறேன். இதில் கண்டறியப்படும் குறைபாடுகள் விரைவில் களையப்படும். சிறைத் துறையில் முறைகேடுகள் நடைபெறாத வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். தற்போது அமலில் உள்ள விதிமுறைகள் கட்டாயமாக பின்பற்றப் படும். மகாராஷ்டிரா, பிஹார், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளை கர்நாட காவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். கர்நாடக அரசிடம் இது தொடர்பாக பேசி, விரைவில் முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x