Published : 23 Jul 2017 09:19 AM
Last Updated : 23 Jul 2017 09:19 AM

எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்திய ராணுவ வெடிபொருட்கள் பத்தே நாட்களில் காலியாகிவிடும்: சிஏஜி அறிக்கை தாக்கல்

எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்திய ராணுவத்தின் வெடிபொருட்கள் பத்தே நாட்களில் காலியாகிவிடும் என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றத் தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் சிக்கிம் மாநிலம் டோக்லாம் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் கடந்த ஜூன் 16-ம் தேதி அத்துமீறி நுழைந்தனர். அங்கு இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தனர். மேலும் சர்ச்சைக்குரிய பகுதியில் சாலை அமைக்கவும் சீன ராணுவம் முயற்சி செய்து வருகிறது.

இதை தடுத்து நிறுத்தியுள்ள இந்திய ராணுவம், டோக்லாம் பகுதியில் இருந்து சீன வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பிரச்சினையால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. காஷ்மீரின் லடாக் பிராந்தியமும் சர்ச்சைக்குரிய பகுதி என்று அந்த நாடு வாதிட்டு வருகிறது.

பாகிஸ்தானும் ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி வருகிறது.

ஏற்கெனவே சீனா, பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக இருநாடுகளும் ஒரே நேரத்தில் போர் தொடுக்க வாய்ப்புள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றனர்.

அதிர்ச்சி தகவல்கள்

இதுதொடர்பாக கடந்த ஜூன் தொடக் கத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியபோது, இருமுனை போரை எதிர்கொள்ள இந்திய ராணுவம் முழு அளவில் தயாராக உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை இந்திய ராணு வத்தின் போர் ஆயத்த நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் கூறியிருப்பதாவது:

மத்திய பாதுகாப்பு அமைச் சகத்தின் கீழ் இந்திய ஆயுத தொழிற்சாலைகள் அமைப்பு செயல்படுகிறது. அந்த அமைப் பின் கட்டுப்பாட்டில் நாடு முழு வதும் 41 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவை இந்திய ராணுவத்துக்கு வெடி பொருட்களை விநியோகம் செய்து வருகின்றன. ஆனால் அந்த வெடிபொருட்கள் தரமான தாக இல்லை. ராணுவத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் போதிய அளவில் வெடி பொருட்களும் உற்பத்தி செய்யப்படுவது இல்லை.

இதனால் ராணுவத்துக்கு வெடி பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க தனியார் ஆலைகளில் இருந்து வெடிபொருட்களை வாங்க கடந்த 2009-13-ம் ஆண்டில் ராணுவ தலைமை நடவடிக்கை எடுத்தது. ஆனால் இப்போதுவரை அந்த திட்டம் நிலுவையில் உள்ளது.

கடந்த 2007-08 மற்றும் 2015-16-ம் ஆண்டுகளில் இந்திய கடற்படையைச் சேர்ந்த போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி களில் 38 விபத்துகள் நேரிட்டுள்ளன. பெரும்பாலும் தீ, வெள்ளம் காரண மாகவே விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதை தடுப்பதற்கான போதிய தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை.

விபத்துகளை தடுக்க கடற்படை சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழுவுக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. புதிய போர்க்கப்பல், நீர்மூழ்கிகளை கடற்படையில் சேர்க்க 8 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஆகிறது.

அண்மையில் கடற்படையிடம் 4 போர்க்கப்பல்கள் ஒப்படைக்கப்பட்டன. இதில் 2 போர்க்கப்பல்களில் போதிய ஆயுதங்கள், சென்சார் கருவிகள் பொருத்தப்படவில்லை. இதனால் கடற்படையின் செயல்திறன் பாதிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் வியூகம்

இந்தியப் பெருங்கடலில் அண்மைக் காலமாக சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. பாகிஸ்தானின் குவாதர் நகரில் மிகப்பெரிய துறை முகத்தை சீனா அமைத்துள்ளது. அதன் பாதுகாப்புக்காக அங்கு சீன போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

மியான்மர், வங்கதேசம், இலங்கை யிலும் குத்தகை அடிப்படையில் சீனா துறைமுகங்களை அமைத்து வருகிறது. இந்தியாவுடன் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த துறைமுகங்களை ராணுவரீதியில் சீனா பயன்படுத்தும் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x