Last Updated : 05 Jan, 2016 09:19 AM

 

Published : 05 Jan 2016 09:19 AM
Last Updated : 05 Jan 2016 09:19 AM

45 நாட்களுக்கு முன்னர் திருமணமானவர்: பதான்கோட்டில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குருசேவக் உடல் தகனம் - இளம் மனைவி, பெற்றோர் கண்ணீர்

பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் குருசேவக்கின் உடல் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்துக்குள், கடந்த 31-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி திடீர் தாக்குதலில் ஈடு பட்டனர். பின்னர் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அவர்களில் கருடா கமாண் டோவைச் சேர்ந்த ராணுவ வீரர் குருசேவக் சிங்கும், தீவிரவாதி களுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தார். அவருடைய உடல் அம்பாலாவில் உள்ள சொந்த கிராமமான கர்நாலாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு ராணுவ மரியாதையுடன் குருசேவக் உடல் தகனம் செய்யப்பட்டது.

குருசேவக்கின் தந்தை சுச்சா சிங்கும் ராணுவத்தில் பணியாற்றிய வர்தான். அவருடைய அண்ணன் ஹர்தீப்பும் ராணுவத்தில் பணியாற்று கிறார். இவர்தான் குருசேவக்கின் சிதைக்கு தீ மூட்டினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள், ‘பாரத் மாதாவுக்கு ஜே’ என்று முழக்க மிட்டனர். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த குருவேசக்குக்கு கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதிதான் திருமணமானது.

அவரது மனைவி ஜஸ்பிரீத் கவுர் கண்ணீர்மல்க நின்றிருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் உறவினர்களும் நண்பர்களும் தவித்தனர்.

குருசேவக்கின் உடலை பார்த்து அவருடைய தாய் அம்ரிக் கவுர் பல முறை மயக்கம் அடைந்து விழுந்தார்.

குருசேவக்கின் குடும்பத்தினர் பல தலைமுறைகளாகவே ராணு வத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நாட்டுக்காக அவர் வீர மரணம் அடைந்தது பெருமையான விஷயம். அது அவருடைய கடமை என்று அவரது தந்தை சுச்சா சிங் கூறினார்.

உள்ளூர்வாசிகள் குருசேவக்கின் வீரத்தை பற்றி பேசினர். ‘‘பதான்கோட் விமான தளத்தில் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில் குண்டுகள் உடலில் பாய்ந்த பிறகும் கூட, துணிச்சலுடன் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டுள்ளார் குருசேவக். அவருடைய இந்த தீரத்தை யாராலும் மறக்க முடியாது’’ என்று உள்ளூர்வாசிகள் கூறினர்.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஹரியாணா அமைச்சர்கள் அனில்விஜ், அபிமன்யு மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மிகவும் புத்திசாலியான குருசேவக் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய விமானப் படையில் சேர்ந்துள்ளார். விமானப் படை தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x