Last Updated : 28 Jun, 2016 09:11 AM

 

Published : 28 Jun 2016 09:11 AM
Last Updated : 28 Jun 2016 09:11 AM

35 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்ட ஏற்பாடு: மைசூரு அரண்மனையில் மகாராஜாவுக்கு கோலாகல திருமணம்

மைசூரு மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடை யாருக்கும், ராஜஸ்தான் மன்னர் குடும்பத்தை சேர்ந்த‌ திரிஷிகா குமாரிக்கும் நேற்று மைசூரு அரண்மனையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இன்று நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சி யில் கர்நாடக முதல்வர் சித்த ராமையா, அமைச்சர்கள் உட்பட 2,000 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மைசூரை ஆண்ட உடையார் சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மகா ராஜாவாக இருந்த கண்ட‌தத்த நரசிம்மராஜா உடையார் கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். மகாராஜாவுக்கு வாரிசு யாரும் இல்லாததால் அவரது மூத்த சகோதரி காயத்ரி தேவியின் பேரனான யதுவீர்கோபாலராஜே அர்ஸை (25) வாரிசாக தத் தெடுத்தனர். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இளங்கலை பொருளாதாரம் பயின்ற இவர், யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் என பெயருடன் முடிசூட்டப்பட்டார்.

மகாராஜா காதல்

யதுவீர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திரிஷிகா குமாரியை காதலித்து வந்தார். இதையடுத்து 2014-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நிச்சயிக் கப்பட்டது. இந்த திருமணத்துக்கு ஒப்புதல் அளித்த‌ மகாராணி பிரமோத தேவி, அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவந்தார்.

36 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு அரண்மனையில் நடை பெறும் திருமணம் என்பதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய் யப்பட்டன. கடந்த புதன்கிழமை யில் இருந்து திருமணத்துக் கான பாரம்பரிய சடங்குகள் தொடங்கின.

அரண்மனை, லலித் மஹால், சாமூண்டீஸ்வரி மலை ஆகியவை அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

மைசூரு மகாராஜாவின் ராஜகுரு தலைமையில் புரோ கிதர்கள் பல்வேறு ஹோமங் களை நடத்தினர். இதையடுத்து யதுவீரும், திரிஷிகா குமாரியும் ராஜகுருவுக்கு பாதபூஜை செய்தனர். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு குலதெய்வமான சாமுண்டீஸ்வரிக்கு சிறப்பு பூஜையும், 450 விநாயகர் சிலை களுக்கு பூஜையும் செய்யப் பட்டது. மேலும் நெல், மொச்சைக்கொட்டை ஏற்றிச் செல்லும் பாரம்பரிய ஊர்வலம் நடைபெற்றது.

சிறப்பு பூஜைகள்

பின்னர் மணமகனுக்கு சமாவர்தனஹோமம், சாஸ்திரம், சகுனசாஸ்திரம், கன்னியதான சாஸ்திரம் ஆகிய பூஜைகளை மணமகளின் பெற்றோர்கள் செய்தனர். காலை 9.05 மணி முதல் 9.35 வரையிலான கடக லக்கனத்தில் யதுவீர் திரிஷிகா குமாரிக்கு தாலி கட்டினார். சுமார் 500 பேர் பங்கேற்ற இந்த திருமணத்தில் மைசூரு மகாராஜா குடும்பத்தினர், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தராகண்ட் மன்னர் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

இதையடுத்து மணமக்கள் சம்பிரதாய முறைப்படி காசி யாத்திரை செல்வதுபோல அரண்மனை வளாகத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன‌ர். பின்னர் பிரபல வயலின் இசைக்கலைஞர்கள் மஞ்சுநாத், நாகராஜ் சகோதரர்களின் கச்சேரி நடந்தது. இரவு 7 மணிக்கு மணமக்களின் ஊஞ்சல் நிகழ்ச்சியும், பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெற்றன. இந்த திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு 26 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்ட‌து.

முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

மைசூரு அரண்மனையில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் துணை தூதர்கள், திரையுலக பிரபல‌ங்கள் உட்பட 2,000 முக்கிய பிரமுகர்க‌ளும், பல்வேறு மன்னர் குடும்பங்களை சேர்ந்த 2,500 பேரும் பங்கேற் கின்றனர். நாளை பொதுமக்களை சந்திக்கும் மணமக்களின் வீதி உலா நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x