Last Updated : 26 Nov, 2015 09:44 AM

 

Published : 26 Nov 2015 09:44 AM
Last Updated : 26 Nov 2015 09:44 AM

3 நாள் ‘பொறுப்பு பிரதமர்’ பதவி வகித்த சுஷ்மா: மோடி வெளிநாட்டுப் பயணத்தால் வாய்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கடந்த வாரம் வெளிநாடு சென்றிருந்தபோது, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 3 நாட்களுக்கு ‘பொறுப்பு பிரதமர்’ ஆக இருந்துள்ளார். சுஷ்மாவும் அப்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தாலும், இதற்காக அவர் தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு செல்லும் நாட்களில் டெல்லியில் அவரது தலைமையில் நடைபெற வேண்டிய கூட்டங் களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை வகிக்கிறார். பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில், மத்திய அமைச்சர்களில் ராஜ்நாத்சிங் முதல் நிலையில் இருப்பது இதற்கு காரணம் ஆகும். இதனால், அவர் ஒருவகையில் ‘பொறுப்பு பிரதமர்’ என கருதப்பட்டாலும் அப்படி ஒரு பதவி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் 4 நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டார். இவருக்கு முன்பாக ராஜ்நாத், 6 நாள் பயணமாக கடந்த 18-ம் தேதி சீனா சென்றுவிட்டார். இதனால் ‘பொறுப்பு பிரதமர்’ வாய்ப்பு மத்திய அமைச்சர்களில் இரண்டாம் நிலையில் இருக்கும் சுஷ்மாவுக்கு கிடைத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் வழக்கமாக பொது மக்களுக்கு அறிவிக்கப் படுவதில்லை. எனினும், மத்திய அமைச்சரவை செயலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான சுற்றறிக்கை அனைத்து துறை களின் உயரதிகாரிகளுக்கு அனுப்பப்படும். இந்த சுற்றறிக்கை கடந்த வாரம் வெளியானதை தொடர்ந்து, சுஷ்மா கடந்த சனிக் கிழமை முதல் திங்கள்கிழமை மாலை வரை 3 நாட்களுக்கு பிரதமரின் முக்கியப் பணிகளை கவனித்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சுஷ்மாவும் கடந்த வாரம் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த நிலையில், அவரிடம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் வெளிநாட்டுப் பயணத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து சுஷ்மா தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்துவிட்டு துபாயில் இருந்து நேரடியாக டெல்லி திரும்பியுள்ளார்.

கடந்த ஆண்டு மோடி பிரதமராக பதவி ஏற்றபோது அவருக்கு அடுத்து இரண்டாம் நிலையில் இருப்பவர் யார் என்பதில் சர்ச்சை எழுந்தது. புதிய அரசு பதவியேற்றபோது, மோடிக்கு அடுத்து ராஜ்நாத்சிங் உறுதிமொழி ஏற்றாலும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் பெயர் இரண்டாம் நிலையில் வைத்து பேசப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரை பிரதமர் மோடி வெளிநாடு சென்றபோது மத்திய அமைச்சரவை செயலகத்தில் இருந்து சுற்றறிக்கை வெளியானது. அதில், பிரதமர் மோடி தலைமை வகிக்க வேண்டிய முக்கிய கூட்டங்களில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை வகிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற சமயங்களில் ராஜ்நாத் ஒரே ஒருமுறை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, மகராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்திருந்தார்.

மத்திய அமைச்சரவை செயலகத்தின் இணையதளத்தில் அனைத்து மத்திய அமைச்சர்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் முதல் பெயரான ராஜ்நாத்சிங்கை அடுத்து சுஷ்மாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவரை அடுத்து அருண்ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, மனோகர் பாரிக்கர், சுரேஷ் பிரபு… என பெயர்கள் தொடர்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x