Last Updated : 17 Jun, 2017 07:46 PM

 

Published : 17 Jun 2017 07:46 PM
Last Updated : 17 Jun 2017 07:46 PM

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு: பிரகாஷ் ஜவடேகர் தகவல்

ஏழு அம்ச திட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

நீர்ப்பாசன வசதியை அதிகரிப்பது, தரமான விதைகள் அளிப்பது, அறுவைக்கு பிந்தைய தானிய இழப்பை தடுப்பது உள்ளிட்ட 7 அம்ச திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.

இந்நிலையில் குஜராத் மாநில், ஆனந்த் நகரில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பிரகாஷ் ஜவடேகர் பேசும்போது, ''வேளாண் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்வதே முந்தைய நடைமுறையாக இருந்தது. ஆனால் நாங்கள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். 7 அம்ச திட்டம் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

துளி நீருக்கு அதிக பயிர்’ என்ற இலக்குடன் அதிக நிதி ஒதுக்கீட்டில் நீர்ப்பாசன வசதிகள் செய்வது, விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்குவது, மண் வளத்தை காப்பது, அறுவடைக்கு பின் தானியத்தை பாதுகாக்க கிட்டங்கிகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைப்பது, உணவுப் பதப்படுத்துதல் மூலம் தானியத்தின் மதிப்பை கூட்டுவது ஆகியவை 7 அம்ச திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, தேசிய வேளாண் சந்தை, மின்னணு தகவல் பரிமாற்ற சந்தைகள், புதிய பயிர் காப்பீடு திட்டம், கோழி, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட துணைத் தொழில்களை ஊக்குவிப்பது ஆகியவையும் இத்திட்டத்தில் உள்ளன.

மானிய விலை யூரியா, விவசாயம் தவிர பிற பயன்பாட்டுக்கு செல்வதை தடுக்கும் வகையில் வேப்ப எண்ணெய் கலந்த யூரியா அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி சேமிக்கிறது. விவசாயிகளுக்கு இதுவரை 7 கோடி மண் வள அட்டைகளை மத்திய அரசு விநியோகம் செய்துள்ளது'' என்றார் பிரகாஷ் ஜவடேகர்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x