Last Updated : 16 Nov, 2014 09:03 AM

 

Published : 16 Nov 2014 09:03 AM
Last Updated : 16 Nov 2014 09:03 AM

2 புதிய அணை, 4 தடுப்பணை, கூட்டுக் குடிநீர் திட்டம், நீர்மின் நிலையம்: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசின் மெகா திட்டங்கள்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் 2 புதிய அணைகள் கட்டுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது.

மேலும் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணை களின் அருகே 4 தடுப்பணைகள் கட்டவும் திட்டமிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், கனகப்புரா வட்டத்தில் மேகேதாட்டு என்ற இடம் இருக்கிற‌து. இங்கு பெரும் பாறைகளுக்கு மத்தில் அருவிகளாக, காவிரி பரந்து விரிந்து பாய்கிறது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் அமைந்திருக்கும் மேகேதாட்டுவில் தான் அர்காவதி ஆறும், சில துணை ஆறுகளும் காவிரி ஆற்றுட‌ன் சங்கமிக்கின்றன.

மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே 2 புதிய அணைகள் கட்ட கர்நாடகம் முடி வெடுத்துள்ளது. இதன் மூலம் நீர்மின் நிலையம், பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், மண்டியா மாவட்ட கரும்பு சாகுபடிக்கு தண்ணீர் ஆகிய 3 தேவைகளை நிறை வேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடக நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இத்திட்டங்கள் தற்போது தொடங்கப் படவில்லை. கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளி யானது. இத்தீர்ப்பு கர்நாடகத்துக்கு பாதக மாக அமைந்ததால் தடுப்பணைகள் கட்டும் திட்டம் முடுக்கிவிடப்பட்டது. மேகே தாட்டுவில் காவிரி ஆறு அகன்று பாய் வதால் அங்கு அணை கட்டலாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து அதற்கான பணிகளை தொடங்குமாறு காவிரி நீர்ப்பாசன மேம் பாட்டு கழகத்துக்கு கர்நாடக அரசு உத்தர விட்டது.

இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமை யில் 25 நீர்வளத்துறை அதிகாரிகள் 56 இடங் களில் ஆய்வுகளை மேற்கொண்டு அதில் 30 இடங்களில் அணைகள் கட்டலாம் என கடந்த 2012-ம் ஆண்டு அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

கிருஷ்ணராஜ‌சாகரை விட பெரிய அணை

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு காவிரி நீர்ப்பாசனத் துறை பொறியாளர்களும், நீர்வளத்துறை அதிகாரிகளும் மேகேதாட்டு பகுதியில் மீண்டும் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வுகளின் முடிவில் 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 2 இடங்களில் 2 புதிய அணைகளோ அல்லது ஒரு அணையோ கட்டப்படும்.

சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த அணையில் சுமார் 50 டிஎம்சி நீரை தேக்கமுடியும். இந்த அணை கட்டப்பட்டால் கர்நாடகத்தின் மிகப்பெரிய அணை என்ற பெயர் கிடைக்கும். ஏனென்றால் தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருக்கும் கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த கொள்ளளவு சுமார் 49 டிஎம்சி, ஹாரங்கி, கபினி, ஹேமாவதி ஆகிய அணை களின் மொத்த கொள்ளளவும் 30 டிஎம்சிக்கு குறைவானது. இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.

மேகேதாட்டுவில் புதிய அணை கட்டு வதற்கான திட்ட வரைவுப் பணிகளில் காவிரி நீர்ப்பாசன மேம்பாட்டு கழகம் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து அணை கட்டுவதற்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது. இதில் அமெரிக்க நிறுவனம் உட்பட 14 நாடுகளை சேர்ந்த பன்னாட்டு கட்டுமான நிறுவனங்கள் தற்போது வரை ஒப்பந்த‌ங்களை தாக்கல் செய்துள்ளன. ஒப்பந்தப்புள்ளிகள் வந்து சேரவேண்டிய நாள் வரும் 30-ம் தேதியுடன் முடிகிறது.

வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இவற்றின் மீது இறுதி முடிவு எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து காவிரி நீர்ப்பாசன மேம்பாட்டு கழகத்தின் நிபுணர் குழுவினர் புதிய அணை கட்டுவது தொடர்பான முழு விவரங்களையும் தயாரித்து அரசுக்கு வழங்குவார்கள்.

சட்ட சிக்கல் இல்லை

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய திட்டங் களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி சட்டசிக்கல் குறித்து ஆலோசிப்பதற்காக கர்நாடக‌ நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலும், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திராவும் கடந்த மாதம் டெல்லி சென்றனர்.

அங்கு கர்நாடக அரசின் சட்ட ஆலோச கரும், காவிரி வழக்குகளில் வாதாடும் மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ்.நாரிமனை சந்தித்து பேசினர். “காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகத்தின் நீரை அம்மாநிலம் பயன்படுத்த உரிமை இருக்கிறது.எனவே புதிய திட்டங்கள் தீர்ப்புக்கு புறம்பானவை அல்ல. இதை தமிழக அரசு தடுக்க முடியாது. எனவே மேகேதாட்டுவில் புதிய அணைகளை கட்டலாம்” என்று நாரிமன் கூறியதாக தெரிகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே 2 புதிய அணைகளுக்கான திட்டவரைவு, நிபுணர் குழு ஒப்புதல், சட்ட நிபுணர்களின் ஒப்பு தல் ஆகிய பணிகளை கர்நாடகம் 90 சதவீதம் முடித்துள்ளது. அடுத்து அணைகள் கட்டுவதற்கு சுமார் 4500 ஏக்கர் வனப்பகுதியை கையகப்படுத்த வேண்டி இருப்பதால் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டால் அவசரத் தேவைக்காக மேகேதாட்டு அணையில் இருந்து 10 டி.எம்.சி. நீரை வழங்க கர்நாடகம் தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

நீர்வளத்துறை அதிகாரிகள் மேலும் கூறும்போது: “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் மேகேதாட்டுவில் நீர் மின் நிலையம் அமைக்க ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்பதால் இங்கு ஆண்டுக்கு 120 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என நிபுணர் குழு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. மேகேதாட்டுவில் புதிய அணைகள் கட்டப் படுவதன் மூலம் மைசூர், மண்டியா, ராம்நகர் மாவட்டங்களில் சுமார் 4.50 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும்.

மேகேதாட்டு திட்டம் தவிர கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு அருகே சிறிய அளவில் 4 தடுப்பணைகள் கட்ட கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ளநீர் தடுப்பணைகளில் சேமித்து, பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு இத்திட்டங்களை நிறை வேற்றினால் முப்போகமும் நெல்லும், கரும்பும் விளையும்” என்றனர்.

அமைச்சர் விளக்கம்

மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறுகையில், ‘‘இப்போதைக்கு மேகேதாட்டு அருகே கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்ற மட்டுமே முடிவு எடுத்துள்ளோம். இந்தத் திட்டமானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பில் கர்நாடகாவுக்கு கிடைத்த நீரை கொண்டே அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நாங்கள் தமிழகத்தின் நீரை பயன்படுத்தவில்லை என புரிந்துக் கொள்ளுங்கள்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்கி வருகிறோம்.எனவே பொதுமக்களின் நலனுக்கான இந்த திட்டத்தை தமிழகம் எதிர்த்தாலும் சட்டமும், மத்திய அரசும் ஏற்காது. மற்றபடி நீர்மின் நிலையம் உள்ளிட்ட மற்ற திட்டங்கள் இப்போதைக்கு எங்களின் பரிசீலனையில் இல்லை''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x