Last Updated : 30 Jul, 2014 08:54 AM

 

Published : 30 Jul 2014 08:54 AM
Last Updated : 30 Jul 2014 08:54 AM

16 வயதுக்கு மேற்பட்டோர் கடும் குற்றம் புரிந்தால் பெரியவராக கருதி தண்டனை: புதிய வரைவு மசோதாவுக்கு சட்ட அமைச்சகம் அனுமதி

பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட கடும் குற்றங்களில் ஈடுபடுவோர் 16 வயதுக்கு மேல் இருந்தால், அவரை பெரியவராக கருதி தண்டனை அளிக்கும் வகையில், சிறார் சட்டத் திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்து, மற்ற அமைச்சகங்களின் கருத்தை கேட்டு சுற்றுக்கு அனுப்பி யுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் குற்றங்களை மட்டுமே நீதிமன்றங்களில் விசாரித்து தண்டனை வழங்க முடியும். 18 வயதுக்கு குறைந்தவர்கள் சிறார்களாக (மைனர்) கருதப்பட்டு, சிறார் நீதி வாரியத்தில் விசாரிக் கப்படுகின்றனர். அவர்கள் கடும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் சிறார் நீதிச் சட்டம் - 2000ன் படி, அவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க முடியும். இந்த 3 ஆண்டுகளும் அவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் தங்கினால் போதும்.

இந்த சலுகை இருப்பது தெரிந்தே, 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பலர் பாலியல் வன்முறை யில் ஈடுபடுவதாக பெண்கள் அமைப் புகள் புகார் கூறுகின்றன.

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார சம்பவத்தில், 18 வயதுக்கு உட்பட்ட ஒருவர் கொடூரமாக நடந்துகொண்டபோதிலும் அவருக்கு 3 ஆண்டுகள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது.

இந்நிலையில் கொடூர குற்றங் களில் ஈடுபடும் சிறார்களுக்கு, சிறார் நீதிச் சட்டப் பாதுகாப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கருத்து வலுப்பெறத் தொடங்கியது.

இந்த நிலையில் சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இத்துறையின் அமைச்சர் மேனகா காந்தி, புதிய வரைவு மசோதாவை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.

வரைவு மசோதாவின்படி, கொலை, அமில வீச்சு, பாலியல் பலாத்காரம் ஆகிய கொடிய குற்றத்தில் ஈடுபடுவோர் 16 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அவர்களது குற்றத்தன்மை மற்றும் மனநிலை குறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கப்படும்.

விசாரணைக்குப் பின், சிறார் நீதி வாரியம் அவரை பெரியவராக கருதி, வழக்கை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்க பரிந்துரை செய்யும். நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் தூக்கு அல்லது ஆயுள் தண்டனை அளிக்க வரைவு மசோதா அனுமதிக்கவில்லை.

கருத்து கேட்பு

இந்த வரைவு மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்து, மற்ற அமைச்சகங்களின் கருத்தைக் கேட்டு சுற்றுக்கு அனுப்பி வைத்துள்ளது. பொதுமக்களின் கருத்தும் வரவேற்கப்பட்டுள்ளது. கருத்துக் கேட்புக்குப் பின், இந்த வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். பின்னர் நாடாளு மன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x