Last Updated : 28 Apr, 2016 08:29 PM

 

Published : 28 Apr 2016 08:29 PM
Last Updated : 28 Apr 2016 08:29 PM

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: இடைத்தரகர் மைக்கேலை ஒப்படைக்கக் கோரி பிரிட்டனுக்கு கடிதம்

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவிடம் ஒப்படைக்கக் (நாடு கடத்த) கோரி பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதிலில், “அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்துமாறு பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதை பிரிட்டன் அரசு பரிசீலித்து வருகிறது” என கூறியுள்ளார்.

இதனிடையே, மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது பாஜக உறுப்பினர் மீனாட்சி லேகி இந்த விவகாரத்தை எழுப்பினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், இதுகுறித்து லேகி பேசும்போது, “ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ஊடகங்களை சமாளிப்பதற்காக ரூ.50 கோடி ஒதுக்கியது தெரியவந்துள்ளது. ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அங்கமாக விளங்கும் ஊடகங்களை தவறாக பயன்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது” என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “இந்த விவகாரம் குறித்து பேச அவைத்தலைவர் அனுமதிக்கக் கூடாது” என்றார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் முக்கிய பிரச்சினை ஊழல்தான். இதில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த நிறுவனத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டாக காங்கிரஸ் கூறுவது தவறு. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு 2014-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதிதான் கறுப்புப் பட்டியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறும்போது, “ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் லஞ்சம் வழங்கியவர்கள் இத்தாலி சிறையில் உள்ளனர். லஞ்சம் வாங்கியவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று சோனியாவிடம் கேட்க விரும்புகிறேன். இவ்விவகாரம் நிகழ்ந்த போது ஆட்சியில் இருந்த அவர்கள்தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் கூறும்போது, “ஹெலிகாப்டர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் லஞ்சம் வாங்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x