Last Updated : 15 Jun, 2016 08:23 AM

 

Published : 15 Jun 2016 08:23 AM
Last Updated : 15 Jun 2016 08:23 AM

ஸ்மிருதி இரானியை டியர் என அழைத்த பிஹார் அமைச்சர்: ட்விட்டரில் வார்த்தைப் போர்

பிஹார் கல்வியமைச்சர் அசோக் சவுத்ரி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை ட்விட்டரில் டியர் என அழைத்து பதிவிட்டார். இதுதொடர்பாக இருவருக்கும் ட்விட்டரில் வெடித்த வார்த்தைப் போர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பிஹாரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிஹார் கல்வித் துறை அமைச்சர் அசோக் சவுத்ரி, ட்விட்டரில், “டியர் ஸ்மிருதி இரானி அரசியலிலும் மேடைப் பேச்சுகளிலும் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, புதிய கல்விக் கொள்கையில் (என்இபி) நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு உடனடியாக பதில் பதிவிட்ட ஸ்மிருதி இரானி, “எப்போதிருந்து பெண்களை நீங்கள் டியர் என அழைக்க ஆரம்பித்தீர்கள் அசோக்” என கேள்வியெழுப்பினார்.

டியர் என்றால் என்ன

அதற்கு பதிலளித்த அசோக் சவுத்ரி, “தொழில்முறை மின்னஞ்சல்கள் டியர் என்றே ஆரம்பிக்கின்றன. உண்மையான பிரச்சினைக்கு பதிலளியுங்கள்; அதனை சுற்றிச் சுற்றி வராதீர்கள்” என பதிவிட்டார்.

இதைத்தொடர்ந்து “உங்க ளுக்கோ அல்லது மற்ற யாருக்குமோ எனது உரையாடல்கள் ‘மரியாதைக்குரிய’ என்றுதான் தொடங்கும்” என ஸ்மிருதி பதிலளித்தார்.

மேலும், புதிய கல்விக் கொள்கை சார்ந்து மாநிலத்தின் கருத்து அளிக்கப்படவில்லை. என்னுடனான நேரடி சந்திப்பின் போதும் கூட நீங்களும் தெரிவிக்க வில்லை என ஸ்மிருதி தெரிவித்தார்.

கல்விக் கொள்கை சார்ந்து அடிப்படையிலிருந்து ஆலோசனை நடத்தாத ஒரே மாநிலம் பிஹார்தான் என்றும் ஸ்மிருதி தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த அசோக், “ஸ்மிருதி நீங்கள் மோடியிடம் இருந்து ஏராளமாக கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். பொய் வாக்குறுதிகளை அளிப்பது, நிறைவேற்றாமைக்காக அடுத்தவர் மீது குற்றம்சுமத்துவது என்பவை ஆர்எஸ்எஸ்ஸின் பாலபாடம். நமது சந்திப்பு தொடர்பான மினிட் புத்தகத்தை நீங்கள் வெளியிட வேண்டும். அப்போது உண்மை வெளிவரும்” என அவர் தெரிவித்தார்.

அதற்கு ஸ்மிருதி, “சார், உங்களின் வேலைப்பளுவுக்கு இடையே கல்விக் கொள்கையில் பங்களிப்பு செய்வதற்கு நேரம் ஒதுக்குவீர்கள் என நம்புகிறேன். மாநிலத்தின் கருத்துக்காக காத்திருக்கிறேன்” என பதிலடி கொடுத்தார்.

இரு அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் ஓய்ந்தபாடில்லை. “இரண்டு லட்சம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புங்கள், கேந்திரிய வித்யாலயாவுக்கு இடம், மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம்” என ஸ்மிருதி மீண்டும் தாக்குதல் நடத்தினார்.

அதற்கு பதிலளித்த அசோக், “எனது வாக்குறுதியை நிறைவேற்றுவது எப்படி என எனக்குத் தெரியும். உங்களின் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” என ட்விட்டரில் பதிவு செய்தார். இரு அமைச்சர்களும் ட்விட்டரில் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x