Published : 28 Apr 2016 02:23 PM
Last Updated : 28 Apr 2016 02:23 PM

ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி33 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

கடல்சார் ஆராய்ச்சிக்கான ஐஆர்என் எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வியாழக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்திருந்தது. இதன்படி ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ என பெயரிடப்பட்ட முதல் செயற்கைக்கோள் 2013-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதையடுத்து ஐஆர்என்எஸ்எஸ்-1பி, 1சி, 1டி,1இ, 1எஃப் ஆகிய 5 செயற் கைக்கோள்கள் குறிப்பிட்ட கால இடை வெளியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த திட்டத்தின் இறுதி (7-வது) செயற்கைக்கோளான ஐஆர்என் எஸ்எஸ்-1ஜி, நேற்று விண்ணில் செலுத்தப் பட்டது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி நேற்று மதியம் 12.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற் கைக்கோள், பிஎஸ்எல்வி - சி33 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

முன்னதாக இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான 51 மணி 30 நிமிட கவுன்ட் டவுன் கடந்த 26-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 9.20 மணிக்கு தொடங்கியது.

இந்த செயற்கைக்கோள் கடல் பகுதிகளின் பாதுகாப்பு, இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, திசை அறிதல் உள்ளிட்ட கடல்சார் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும். முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும்.

இந்த செயற்கைக்கோளை வெற்றிகர மாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்தியா ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கடல்சார் ஆராய்ச்சிக்கான 7 செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய இந்த திட்டத்துக்கு ‘நாவிக்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட தையடுத்து இஸ்ரோ தலைவர் கிரண் குமார் இந்த திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பேசியதாவது:

இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டு மக்களுக்கு மகத்தான சிறந்த பரிசை அளித்துள்ளனர். ஜிபிஎஸ் தொழில்நுட் பத்துக்காக பல நாடுகளை நாம் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம் நாம் தற்சார்பு அடைந்துள்ளோம்.

இத்திட்டத்துக்கு ‘நாவிக்’ என பெயரிட முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் தெற்காசிய நாடுகள் பயனடையும்.

இந்த செயற்கைக்கோள் மூலம் மீனவர்கள் கடலில் மீன் வளம் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட முடியும். கடலில் செல்லும் மாலுமிகள் திசை அறியவும், தட்பவெப்ப நிலை குறித்து அறிந்து பயணத்திட்டத்தை வகுக் கவும் உதவும். பேரிடர் காலங் களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணவும், மீட்புப் பணி களில் ஈடுபடவும் உதவும். சாதனை புரிந்த விஞ்ஞானிகளை மீண்டும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு மோடி கூறினார்.

நாவிக் = படகோட்டி

‘நாவிகேஷன்’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமாக ‘நாவிக்’ என்பது இருந்தாலும், இந்தியில் ‘நாவிக்’ என்ற வார்த்தைக்கு ‘படகோட்டி’ அல்லது ‘கடலோடி’ என்ற பொருள் வரும். இந்த செயற்கைக்கோளை மீனவர்களுக்கும் கடல் பயணத் தையே வாழ்க்கையாகக் கொண்டவர் களுக்கும் அர்ப்பணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x