Last Updated : 28 Sep, 2015 10:35 AM

 

Published : 28 Sep 2015 10:35 AM
Last Updated : 28 Sep 2015 10:35 AM

பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள்: சாதனை நாடுகள் பட்டியலில் இடம் பிடித்தது இந்தியா

பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வு செயற் கைக்கோள் ‘ஆஸ்ட்ரோசாட்’ நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதன் மூலம், விண்வெளி ஆய்வு செயற்கைக் கோளை வெற்றிகரமாக செலுத்திய உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் மற்றும் எக்ஸ்ரே கதிர் மண்டலங்கள் கொண்ட விண்வெளிப் பகுதியை ஆய்வு செய்யவும், பால்வெளி வீதியில் இருப்பதாக நம்பப் படும் கருந்துளை குறித்து ஆய்வு செய்வதற்காகவும் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைக் கோளான ‘ஆஸ்ட்ரோசாட்’ என்ற நவீன ரக செயற்கைக்கோளை இந்தியா வடிவமைத்தது.

வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது

இந்த செயற்கைக்கோள் நேற்று காலை 10 மணிக்கு ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

இந்நிகழ்வை ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் வசிக்கும் மக்கள் ஏராளமானோர் தங்கள் வீட்டு மாடியில் இருந்து கண்டு ரசித்தனர். மேலும், கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த விஞ்ஞானிகளும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

‘இஸ்ரோ’ தலைவர் கிரண்குமார் விஞ்ஞானி களை கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.

சுற்றுவட்டப் பாதையில்..

ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் செலுத்தப்பட்ட 22 நிமிடம் 32 விநாடிகளில் பூமியிலிருந்து 650 கி.மீ. உயரத்தில் உள்ள நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோல மற்ற செயற்கைக்கோள்கள் அனைத்தும் 25 நிமிடம் 39 விநாடிகளுக்குள் அவற்றுக்குரிய வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. 1,513 கிலோ எடை கொண்ட ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது.

அமெரிக்க செயற்கைக்கோள்

இந்த செயற்கைக்கோளுடன் கனடாவின் என்எல்எஸ்-14 (14 கிலோ), இந்தோனேசியாவின் லெபான் ஏ-2 (76 கிலோ). அமெரிக் காவின் லெமூர் (28 கிலோ) வகை செயற்கைக்கோள்கள் 4 என மொத்தம் 6 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய ராக்கெட் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது இதுதான் முதல் முறை.

பட்டியலில் இடம்

விண்வெளி ஆராய்ச்சி துறையில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் மட்டுமே இதுவரை விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளன. இந்நிலையில், ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத் தப்பட்டதையடுத்து, இப்பட்டியலில் 4-வது நாடாக இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

இந்திய ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட வெளி நாட்டு செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித் திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x