Last Updated : 09 Jul, 2015 12:31 PM

 

Published : 09 Jul 2015 12:31 PM
Last Updated : 09 Jul 2015 12:31 PM

வியாபம் ஊழல் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்

பல மர்ம மரணங்கள் பின்னணி கொண்ட மத்தியப் பிரதேசத்தின் 'வியாபம்' ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன், மத்தியப் பிரதேச ஆளுநரை நீக்கக் கோரும் விவகாரத்தில், அம்மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

மத்தியப் பிரதேசம் தொழில் முறை தேர்வு வாரியம் (எம்பிபிஇபி), மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர் தேர்வு வாரியமாகச் செயல்படுகிறது. மருத்துவத் துறை நியமனங்களுக்கான தேர்வுகளையும் இது நடத்துகிறது. 'வியாபம்' எனவும் அறியப்படும் இந்த வாரியத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டது.

வியாபம் முறைகேட்டில் தொடர்புடைய இளம்பெண் ஒருவர் ரயில்வே பாதை அருகே மர்மமான முறையில் கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்து கிடந்தார். அப்பெண்ணின் பெற்றோரிடம் அண்மையில் பேட்டியெடுத்துக் கொண்டிருக்கும்போதே நிருபர் அக்ஷய் சிங் திடீரென வாயில் நுரைதள்ளி இறந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மறுநாளே மருத்துவக் கல்லூரி டீன் அருண் சர்மா இறந்தது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 'வியாபம்' ஊழல் தொடர்பாக இதுவரை 46 பேர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வியாபம் முறைகேடு வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், அம்பல ஆர்வலர்கள் (whistleblowers) ஆஷிஷ் சதுர்வேதி, டாக்டர் ஆனந்த் ராய் மற்றும் பிரசாந்த் பாண்டே ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், வியாபம் ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.

இந்த ஊழல் குறித்த விசாரணைக்கு சிபிஐ அமைப்பு தயாராக இருப்பதாக அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரஸ்தோகி தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் வரும் 24-ம் தேதிக்குள் சிபிஐ தனது பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மாநில அரசுக்கு நோட்டீஸ்:

அதேபோல், வியாபம் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவை நீக்கம் செய்வது குறித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்தியப் பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கும், ஆளுநருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டிலேயே இதுவரை நடந்திராத அளவுக்கு ஒரு ஊழல் விவகாரத்தில் மர்மமான முறையில் 46 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x