Last Updated : 29 Mar, 2017 07:26 AM

 

Published : 29 Mar 2017 07:26 AM
Last Updated : 29 Mar 2017 07:26 AM

வழியெங்கும் வறண்டு கிடக்கும் காவிரி; தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடகா: உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன ஆகும்?

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் வரலாறு காணாத வறட்சியால் கிருஷ்ணராஜசாகர் அணையும் மேட்டூர் அணையும் வறண்டு கிடக்கின்றன. தமிழகத் துக்கு 2 ஆயிரம் கன அடி நீரை விடக்கோரிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியா மல் கர்நாடகா அரசு திணறுகிறது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் நீர்வரத்து குறைந்தது. இதேபோல காவிரியின் முக்கிய துணை நதியான கபினி உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியிலும் சரியாக மழை பெய்ய‌வில்லை. இதனால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்து கோடையில் வறண்டு காணப்படுகிறது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு நீரை வழங்கும் கிருஷ்ணராஜசாகர் அணை போதிய நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மொத்தமாக 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் 74 அடி வரை மட்டுமே நீரை பயன்படுத்த முடியும் . வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் தற்போது 78 அடி வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இன்னும் 4 அடி நீரை வைத்துக்கொண்டு கோடையை எப்படி சமாளிப்பது என காவிரி நீர் நிர்வாக கழகம் யோசித்து வருகிறது.

கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீருக்காக தினமும் 12 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும். தற்போதுள்ள நீரை வைத்து ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை சமாளிக்க முடியாது. எனவே ஹேமாவதி, ஹாரங்கி, கோரூர் ஆகிய அணைகளில் உள்ள நீரை கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கொண்டுவரும் பணிகள் தொடங்கியுள்ளன.

முதல்கட்டமாக ஹேமாவதி அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 3 தினங்களில் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 81 அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீரைக் கொண்டு அடுத்த ஒரு மாதத்துக்கு பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு குடிநீரை விநியோகிக்க முடியும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘வரும் ஜூலை 11-ம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும்'' என உத்தரவிட்டது. அதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலும், ‘‘கர்நாடகாவில் குடிக்கவே குடிநீர் இல்லை. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாத நிலையில் இருக்கிறோம். இதனை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம்’’ என்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்படவில்லை. கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு அளவை நிலையத்தில் இருந்து தானாக வெளியேறும் நீர் மட்டுமே ஒகேனேக்கலுக்கு செல்கிறது. இதன் அளவும் வினாடிக்கு 100 கனஅடிக்கு குறைவாகவே உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு செல்லும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

எனவே தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி நீரை திறக்கக்கோரும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் நீரை வழங்காத கர்நாடகாவுக்கு எதிராக‌ தமிழக அரசு மனு தாக்கல் செய்யுமா? அல்லது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியை கர்நாடகா நீதிமன்றத்தில் எடுத்துரைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரு தரப்பு நிலவரத்தையும் நேரில் ஆராய்ந்த விவசாயிகளோ, ‘‘இப்போதைக்கு நல்ல‌ மழை பெய்தால் மட்டுமே பிரச்சினை தீரும். பாலம் பாலமாக வெடித்து கிடக்கும் கிருஷ்ணராஜசாகர் அணையும் மேட்டூர் அணையும் அதன்பிறகே நிரம்பும்''என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x