Last Updated : 01 Mar, 2016 09:27 AM

 

Published : 01 Mar 2016 09:27 AM
Last Updated : 01 Mar 2016 09:27 AM

வரி உட்பட 45% அபராதம் செலுத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக்க 4 மாதம் அவகாசம் வழங்க முடிவு

உள்நாட்டில் இதுவரை கணக்கில் காட்டப்படாமல் உள்ள கருப்புப் பணம் பற்றிய தகவலை தெரிவித்து அதை வெள்ளையாக்குவதற்கு 4 மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வரும் நிதி யாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

கருப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, வரி ஏய்ப்பு செய்வோரை கண்டுபிடிப்பதற்கான தொழில் நுட்ப முறைகளை வருமான வரித் துறை புகுத்தி உள்ளது.

வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டறிந்தால் அவர்களிடம் அபராதம் வசூலிப்பதுடன் சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்புப் பணம் பற்றிய தகவலை தாமாக முன்வந்து தெரிவிக்க கடந்த ஆண்டு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.

அந்த வகையில், உள்நாட்டில் கணக்கில் காட்டாமல் உள்ள ரொக்கம் மற்றும் சொத்துகள் பற்றிய விவரங்களை வருமான வரித் துறைக்கு தெரிவிக்க 4 மாதம் அவகாசம் வழங்கப்படும். அதாவது வரும் ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கருப்பு பணம் பற்றிய தகவலை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

இதன்படி, தகவல் தெரிவிக்கப் படும் மொத்த சொத்து மதிப்பில் 30 சதவீதம் வரி, 7.5 சதவீதம் உபரி வரி, அபராதம் 7.5 சதவீதம் என 45 சதவீதத்தை 2 மாதங்களில் செலுத்தினால் போதும். உபரி வரியாக வசூலிக்கப்படும் தொகை வேளாண் துறை மற்றும் கிராம பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு தாமாக முன்வந்து கருப்பு பணம் பற்றிய தகவலை தெரிவித்துவிட்டால் வருமான வரி, செல்வ வரி சட்டங்களின்படி வரி ஏய்ப்பு தொடர்பான விசா ரணையோ சோதனையோ நடத் தப்படமாட்டாது. அத்துடன் இது தொடர்பான தண்டனையி லிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த காலக்கெடு முடிந்த பிறகு கருப்புப் பணம் வைத்திருப்பது (வரி ஏய்ப்பு) கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப் பட்ட நபர் மீது வருமான வரி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x