Last Updated : 23 Feb, 2017 04:22 PM

 

Published : 23 Feb 2017 04:22 PM
Last Updated : 23 Feb 2017 04:22 PM

ரயில்வே திட்டப் பணிகளில் இழுபறி முடிவுக்கு வருமா?- தமிழக முதல்வர் பழனிசாமிக்கு ரயில்வே அமைச்சர் கடிதம்

தமிழகத்தில் ரயில்வே திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக, ரயில்வே அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து கூட்டாண்மை நிறுவனம் அமைக்கும் திட்டத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு ரயில்வே அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தை தொடர்ந்து இந்த இழுபறி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன. மேலும் புதிய திட்டங்களையும் மாநில அரசுகள் கோரி வருகின்றன. நிதிப் பற்றாக்குறை காரணமாக அனைத்து திட்டங்களையும் மத்திய அரசால் செயல்படுத்த முடிவதில்லை. இதை தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஒரு புதிய திட்டம் வகுத்தது. இதன்படி ரயில்வே அமைச்சகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே கூட்டாண்மை நிறுவனங்கள் தொடங்கி அவற்றின் மூலம் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் திட்டச் செலவில் மத்திய அரசின் பங்கு 49 சதவீதமாகவும் மாநில அரசின் பங்கு 51 சதவீதமாகவும் இருக்கும். இந்த விகிதாச்சாரம் சில மாநிலங்களுக்கு வேறுபடவும் கூடும். இதன்படி இதுவரை 9 மாநிலங்கள், ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து கூட்டாண்மை நிறுவனம் தொடங்கியுள்ளன.

தென் மாநிலங்களில் தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் இந்நிறுவனம் தொடங்கப்பட்டு விட்டது. இது தொடர்பாக 'தி இந்து' இணையதளத்தில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டாண்மைநிறுவனம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

கூட்டாண்மை நிறுவனம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்துக்கு பதிலாகவும் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதில் தமிழகம் தொடர்ந்து விதிக்கும் நிபந்தனையில் சுரேஷ் பிரபு சிறிய மாற்றம் செய்துள்ளார்.

இது குறித்து 'தி இந்து'விடம் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ''தமிழக அரசின் பங்குக்கு பதிலாக நிலத்துக்கான செலவை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கூறிவந்தார். இதை ரயில்வே அமைச்சகம் ஏற்க முடியாமல் கூட்டாண்மை நிறுவனம் தொடங்கும் பணி நிலுவையில் இருந்து வந்தது. இதை பன்னீர்செல்வம் மீண்டும் குறிப்பிட்டு டிசம்பரில் எங்களுக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பழனிசாமிக்கு எங்கள் அமைச்சர் பதில் அனுப்பியுள்ளார். இதில் மத்திய அரசுக்கு லாபகரமான திட்டங்களில் மட்டும் நிலத்தின் விலையை தமிழக அரசின் பங்காக ஏற்பதாகவும் பிற திட்டங்களில் மற்ற மாநிலங்களை போல் விகிதாச்சார முறையில் செலவுப் பங்கீடு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.

நிலத்துக்கான விலையை மட்டும் தனது பங்காக ஏற்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால் குறைந்த மதிப்புடைய நிலத்தைக் கூட தமிழக அரசு அதிகமாக நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அமைச்சகம் அஞ்சுகிறது. இந்நிலையில் தற்போது செய்யப்பட்டுள்ள சிறு மாற்றத்தை தமிழக அரசு ஏற்கும் என ரயில்வே அமைச்சகம் கருதுகிறது. இதன் மூலம் கூட்டாண்மை நிறுவனம் தொடங்குவதில் உள்ள சிக்கல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலுவை திட்டங்கள் மீது புதிய உத்தரவு

'தி இந்து'வில் வெளியான செய்தியில், ''தமிழகத்தின் புதிய ரயில் பாதை, அகல ரயில் பாதை, கூடுதல் ரயில் பாதை உள்ளிட்டவை தொடர்பாக இருபதுக்கும் மேற்பட்ட திட்டங்கள் மீதான சர்வே எடுக்கப்பட்டன. இவற்றில் பல ரத்து செய்யப்பட்டு, 10 திட்டங்கள் மட்டும் ரயில்வே நிர்வாக வாரியத்தின் ஒப்புதலுக்கு காத்துள்ளன'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியின் மூலம் பல ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள சர்வேக்கள் அமைச்சர் சுரேஷ் பிரபுவின் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய சர்வேக்களை மீண்டும் எடுக்க உத்தரவிடப்பட இருப்பதாக ரயில் அமைச்சக வட்டாரங்கள் 'திஇந்து' இணையதளத்திடம் தெரிவித்தன.

புதிய வகை ரயில் பெட்டிகள் மாற்றுவது தொடர்பான விஷயத்திலும் ரயில்வே அமைச்சகம் பதில் அளித்தனர். பழைய வகை பெட்டிகளுக்கு ஆயுட்காலம் சுமார் 15 வருடம் எனவும், தமிழகத்தில் ஓடுபவைகள் பெரும்பாலும் புதியவை என்பதால் மாற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தனர். இந்த பெட்டிகளை மாற்றுவதால் அரசிற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால், இன்னும் சில ஆண்டுகள் ஓடிய பின் அவை படிப்படியாக மாற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x