Published : 19 Jun 2017 03:21 PM
Last Updated : 19 Jun 2017 03:21 PM

யார் இந்த ராம்நாத் கோவிந்த்?

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பிஹார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றிய விவரம் வருமாறு:

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டம் தேராபூரில், 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி விவசாயக் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார்.

பிறகு டெல்லி உயர் நீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்தி லும் மொத்தம் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.

வழக்கறிஞர் என்ற முறையில், தலித் மற்றும் பழங்குடியின பெண்கள், ஏழை பெண்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு சட்ட உதவி வழங்கி உள்ளார்.

1977-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த ஜனதா அரசில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச் செயலாளராக பணியாற்றினார். இதுதான் அவரது அரசியல் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

அதன்பிறகு பாஜவில் சேர்ந்த இவர், உத்தரபிரதேச மாநிலம் காதம்பூர் மக்களவை தொகுதியில் கடந்த 1991-ம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானியுடன் நெருக்கமாக இருந்தார்.

இதையடுத்து, உத்தர பிரதேசத்திலிருந்து 1994-ல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 2 முறை அதாவது 2006-ம் ஆண்டு வரை ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

அப்போது தலித் மற்றும் பழங்குடியினர் நலன், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் சட்டம் மற்றும் நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் உறுப்பினராக பதவி வகித்தார்.

மேலும் பாஜகவின் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசிய தலைவராகவும் (1998 2002) கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் ராம்நாத் பதவி வகித்துள்ளார்.

கல்வித் துறையிலும் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். குறிப்பாக, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் (லக்னோ) நிர்வாகக் குழு உறுப் பினராகவும் கொல்கத்தா ஐஐஎம் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில், இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஹார் மாநில ஆளுநராக ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டார்.

ராம்நாத் கோவிந்த் 1974-ம் ஆண்டு சவிதாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x