Last Updated : 17 May, 2015 12:39 PM

 

Published : 17 May 2015 12:39 PM
Last Updated : 17 May 2015 12:39 PM

மோனோ ரயில் பாதுகாப்புக்கு ரூ.76 லட்சம் செலவு: ஆர்டிஐ விண்ணப்பத்துக்கு எம்எம்ஆர்டிஏ பதில்

நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் இயங்கிவரும் மோனோ ரயில் பாதுகாப்புக்காக மாதந்தோறும் ரூ.76 லட்சம் செலவிடப்படுவதாக மும்பை மெட்ரோ மண்டல வளர்ச்சி ஆணையம் (எம்எம்ஆர்டிஏ) தெரிவித் துள்ளது.

தகவல் பெறும் உரிமை சட்ட (ஆர்டிஐ) ஆர்வலர் அனில் கல்காலி, எம்எம்ஆர்டிஏவுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். மோனோ ரயிலில் தினமும் பயணம் செய்யும் பயணிகள் எத்தனை பேர், டிக்கெட் வருமானம், அதன் பாதுகாப்புக்காக செலவிடப்படும் தொகை எவ்வளவு என்பன உள்ளிட்ட விவரங்களை அவர் கோரியிருந்தார்.

இவரது கடிதத்துக்கு மோனோ ரயில் திட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியும் துணை பொறியாளரு மான வருண் வைஷ் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

7 மோனோ ரயில் நிலையங்கள் மற்றும் பணிமனைகளின் பாதுகாப்புப் பணி மகாராஷ்டிர மாநில பாதுகாப்புக் கழகத்திடம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக மாதந்தோறும் ரூ.75,96,077 செலவிடப்படுகிறது. மோனோ ரயில் திட்டத்தின் திட்டமிட்டசெலவுகளுக்காக ரூ.2,716 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ.2,290 கோடி செலவிடப் பட்டுள்ளது.

மோனோ ரயில் அறிமுகம் செய்யப்பட்ட 2014 பிப்ரவரி முதல் 2015 மார்ச் வரையில் (14 மாதங்கள்) 59,98,069 பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்தி உள்ளனர். பயணிகள் டிக்கெட் விற்பனை மூலம் ரூ.4,88,46,969 வருவாய் ஈட்டப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கல்காலி எழுதியுள்ள கடிதத்தில், “பொதுமக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப் படும் மோனோ ரயில் திட்டத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அதிக தொகையை மகாராஷ்டிர அரசு வசூலிக்கிறது. இதை நிறுத்திக் கொண்டால் எம்எம் ஆர்டிஏவுக்கு சுமை குறையும்.

மேலும் பாதுகாப்பு என்ற பெயரில் அந்தப் பணியில் அளவுக்கு அதிகமாக பணியாளர்களை ஈடுபடுத்துவதையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x