Last Updated : 04 Jul, 2017 07:41 PM

 

Published : 04 Jul 2017 07:41 PM
Last Updated : 04 Jul 2017 07:41 PM

மே.வங்க ஆளுநர் திரிபாதி என்னை மிரட்டி, அவமானப்படுத்தினார்: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு

மேற்குவங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். அவரது பேச்சால் எனக்கு அவமானம் ஏற்பட்டது என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதுரியாவில் நடந்த மத மோதல்கள் குறித்து ஆளுநர் திரிபாதியை, பாஜக பிரதிநிதிகள் குழு சந்தித்து விவரித்தது. அதன் பின், முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் அழைத்து ஆளுநர் திரிபாதி விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆளுநர் தன்னை மிரட்டி, அவமானப்படுத்தியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். தலைமை செயலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆளுநர் திரிபாதி என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். பாஜகவுக்கு சாதகமான முறையில் அவர் பேசிய விதத்தால் நான் அவமானத்துக்கு ஆளானதாக உணர்ந்தேன். இவ்வாறு நீங்கள் பேசக் கூடாது என தெரிவித்தேன். அவர் (ஆளுநர்) பாஜகவின் மாவட்ட தலைவர் போல நடந்து கொண்டார். சட்டம் ஒழுங்கு குறித்து பெரிதாக பேசினார். அரசமைப்பு சட்டத்தினால் ஆளுநர் பதவிக்கு வந்தவர் அவர்.. நான் மக்களால் முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன். ஆளுநரின் கருணையால் இந்த பதவிக்கு வரவில்லை. ஆளுநர் இவ்வாறு செய்யக் கூடாது. அவர் தனது பதவியின் மாண்பை புரிந்து நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மம்தாவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

ராஜ்நாத்துக்கு கடிதம்

இதற்கிடையே வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்து குடும்பங்களை 2000 முஸ்லிம்கள் சேர்ந்து தாக்கியதாகவும், கட்சி அலுவலகங்களை அவர்கள் தீயிட்டு கொளுத்தியதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கு தலையிட வேண்டும் என பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அதில், ‘‘இந்து குடும்பங்களை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளனர். பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 5 பாஜக அலுவலகங்களும் இந்த வன்முறையில் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் பேஸ்புக்கில் ஆட்சேபிக்கும் வகையிலான பதிவு போடப்பட்டதே வன்முறை நிகழ காரணம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக மத ரீதியிலான அரசியலில் பாஜக ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே. மாநிலத்துக்கு 300 துணை ராணுவப்படைவீரர்களை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x