Published : 13 May 2014 03:38 PM
Last Updated : 13 May 2014 03:38 PM

பிரதமர் மன்மோகனுக்கு ஊழியர்கள் பிரியாவிடை: பூங்கொத்து கொடுத்து பாராட்டு

பத்து ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங்குக்கு பிரதமர் அலுவலக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை பிரியாவிடை அளித்தனர்.

பிரதமர் மன்மோகன் சிங் 2004-ம் ஆண்டு முதல் பிரதமர் பதவியில் உள்ளார். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. அதற்கு அடுத்த நாள் 17-ம் தேதி அவரது பதவிக் காலம் நிறைவடைகிறது.

இதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலக ஊழியர்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெற்கு பிளாக் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிரியாவிடை அளித்தனர்.

இந்தநிகழ்ச்சியில் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த 110 நேர்முக உதவியாளர்களும் 400 ஊழியர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து அவர்கள் அளித்த பூங்கொத்துகளை பிரதமர் மன்மோகன் சிங் பெற்றுக் கொண்டார்.

ஊழியர்கள் அனைவரும் தெற்கு பிளாக் அலுவலக வராண்டாவில் நின்றபடி பிரதமருக்கு கைதட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். “நாட்டுக்காக நீங்கள் சிறப்பாக பணியாற்றினீர்கள். உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று பிரதமர் அலுவலகம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

புதிய பிரதமரை வரவேற்கும் வகையில் பிரதமர் அலுவலகத்தில் சீரமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன.

17-ம் தேதி பிரதமர் ராஜினாமா

பிரதமர் மன்மோகன் சிங் வரும் 17-ம் தேதி கடைசி அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி ராஜினாமாவை அறிவிப்பார் என்று தெரிகிறது. பின்னர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துவிட்டு நாட்டு மக்களுக்கு கடைசி உரை நிகழ்த்துவார் என்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதவி விலகியதும் தற்போது அவர் தங்கியுள்ள 7, ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் இருந்து, 3, மோதிலால் நேரு மார்க் இல்லத்துக்கு இடம்பெயர உள்ளார்.

பிரியாவிடை நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முதன்மைச் செயலாளர் புலோக் சாட்டர்ஜி, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் மற்றும் ஊடக ஆலோசகர் பங்கஜ் பச்சோரி ஆகியோர் பங்கேற்றனர்.

இதனிடையே காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழியனுப்பும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் புதன்கிழமை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

குடியரசுத் தலைவருடன் சோனியா சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில் அடுத்த கட்ட அரசியல் சூழ்நிலை குறித்து அவர்கள் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x