Last Updated : 13 May, 2017 01:14 PM

 

Published : 13 May 2017 01:14 PM
Last Updated : 13 May 2017 01:14 PM

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை குடும்பத்துடன் சேர்க்க பல்லாயிரம் மைல்கள் பயணித்த கர்நாடக காவல்துறை

சட்டீஸ்கரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை, கடும் முயற்சிகளுக்குப் பிறகு அவரின் சகோதரரிடம் சேர்த்திருக்கிறது கர்நாடக காவல்துறை.

மனநலம் பாதிக்கப்பட்டு, கொலை வழக்கொன்றில் சிக்கிய சட்டீஸ்கர் இளைஞர் ஜவஹர்லால் போக். இவர் கர்நாடகாவில் உள்ள சீயோன் மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 13-ம் தேதி அவரை விடுவித்து தக்‌ஷின கன்னட நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டீஸ்கரின் வடக்கு பாஸ்டர் மாவட்டத்துக்கு அருகில் உள்ள தொலைதூர கிராமத்தில் வசிக்கும் ஜவஹர்லால் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க பலத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக கர்நாடகத்தில் இருந்து சட்டீஸ்கர் மாநிலத்தில் உதவி கோரப்பட்டது.

மே 2-ம் தேதி ஜவஹர்லாலின் சகோதரர் நோஹர் போக் கண்டுபிடிக்கப்பட்டார். அவரின் மொபைல் எண்ணும் கிடைத்தது. ஆனால் தன் கிராமத்தில் இருந்து மங்களூரு வரை பயணிக்க இயலாத சூழலில் நோஹர் போக் இருந்தார்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினரை அங்கே அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மங்களூரு மூட்பித்ரி காவல்நிலைய தலைமை காவலர் விஜய் கஞ்சனும், சக காவலர் அகில் அகமதுவும் மங்களூருவில் இருந்து சட்டீஸ்கர் மாநிலத்தின் தொலைதூரக் கிராமத்துக்குப் பயணித்தனர்.

மாவோயிஸ்டுகள் நிறைந்த பகுதி

பெங்களூருவில் இருந்து ரயில் வழியாக ராய்பூர் சென்ற அவர்கள், 3 பேருந்துகள் மாறி பஸ்தாரை அடைந்தனர். சுக்மா பகுதிக்கு அருகிலும், மாவோயிஸ்டுகள் நிறைந்த பகுதிக்கு அருகிலும் இருந்த ஜவஹர்லாலின் கிராமத்துக்குச் செல்வதில் உள்ள சவால்களை காவலர்கள் அறிந்தே இருந்தனர்.

குறிப்பாக 24 சிஆர்பிஎஃப் வீரர்கள் அங்கே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். ஆனாலும் ஜவஹரை அவர் குடும்பத்தோடு சேர்க்கும் ஆர்வம் காவலர்களை உந்தித் தள்ளியது.

இதுகுறித்துப் பேசிய விஜய் கஞ்சன், ''3 வருடங்களுக்குப் பிறகு இரண்டு சகோதரர்களும் ஒன்றிணைந்தனர். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்ட அவர்கள், மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்த சம்பவம் எங்கள் மனதை உருக்குவதாக அமைந்தது'' என்கிறார்.

இந்தப் பயணத்துக்கான மொத்த செலவையும் கர்நாடக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x