Last Updated : 24 Nov, 2016 01:00 PM

 

Published : 24 Nov 2016 01:00 PM
Last Updated : 24 Nov 2016 01:00 PM

மத்திய அரசின் மாபெரும் நிர்வாக தோல்வி: ரூபாய் நோட்டு உத்தி மீது மன்மோகன் சிங் சரமாரி தாக்கு

'ரூ.500, 1000 செல்லாது என்ற நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்திய விதம் மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்' என மாநிலங்களவையில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றம் கூடிய நாள் முதலே, நோட்டு நடவடிக்கை குறித்து பிரதமர் முன்னிலையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால், நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் தொடர்ந்து முடங்கியது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு வந்தார். நோட்டு நடவடிக்கை மீதான விவாதத்துக்கு அவைத் தலைவர் அனுமதியளித்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் விவாதத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். அவையில் மன்மோகன் சிங் பேசியது:

"ஊழல், கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை. ஆனால், ரூ.500, 1000 செல்லாது என்ற நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்திய விதம் மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி மோசமான நிர்வாகத்துக்கு முன்னுதாரணம் ஆகிவிட்டது. நோட்டு நடவடிக்கை குறித்து பிரதமர் கடந்த 8-ம் தேதி அறிவித்தார். ஆனால், அதன்பின்னர் ஒவ்வொரு நாளும் வங்கி நடவடிக்கைகள் தொடர்பாக புதுப்புது அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இது நல்ல போக்கல்ல. இத்தகைய அறிவுப்புகள் பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மீது மக்கள் கொண்டுள்ள மதிப்பை குறைத்துவிடும்.

'நோட்டு நடவடிக்கை திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை'

மத்திய அரசின் நோட்டு நடவடிக்கை திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டப்பூர்வ கொள்ளை. மத்திய அரசின் நோட்டு நடவடிக்கை மீது குற்றம், குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது இலக்கல்ல. ஆனால், காலம் கடந்துவிட்டாலும்கூட ஏழை மக்களின் துயர் துடைக்க இப்போதாவது பிரதமர் ஏதாவது நடைமுறைக்கு சாத்தியப்பட்ட நல்ல முடிவுகளை எடுப்பார் என நான் நம்புகிறேன்.

அன்றாடம் அல்லல்படும் சாமானியர்களின் துயரங்களுக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும். இதை நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் சொல்கிறேன். ஏனெனில் நோட்டு நடவடிக்கையின் இறுதி பலன் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது.

நோட்டு நடவடிக்கையின் தாக்கம் 50 நாட்களில் சீரடையும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 50 நாட்களும் சாமானிய மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்ற நிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஏழை மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

பிரதமர் எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும், "உலகெங்கிலும் ஏதாவது ஒரு நாட்டில், மக்கள் வங்கிகளில் அவர்கள் டெபாசிட் செய்த சொந்த பணத்தை தங்கள் பயன்பாட்டுக்காக எடுக்கவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்களா?"

நோட்டு நடவடிக்கையில் மத்திய அரசை கண்டிக்க இது ஒன்று மட்டுமே போதுமானது. சாமானிய மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், ஏழை மக்களின் துயர் துடைக்க சீரமைப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

நோட்டு நடவடிக்கையால் அமைப்பு சாரா தொழில்கள் முடங்கியுள்ளன, கூட்டுறவு சேவை முடங்கியுள்ளன.

மத்திய அரசின் இந்த நோட்டு நடவடிக்கையால் வருங்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 2% வரை குறையலாம். நான் குறைவாக கணித்திருக்கிறேன் என்றே கூறுவேன். இதற்கும் அதிகமான அளவில்கூட ஜிடிபி குறைய வாய்ப்புள்ளது. ஆனால், அரசோ விளைவுகளை குறைத்து மதிப்பிட்டிருக்கிறது.

நோட்டு நடவடிக்கையின் தாக்கத்தால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். உயர் மதிப்பு நோட்டுகளை முடக்கியுள்ள செயல் மக்கள் மத்தியில் ரூபாய் மீதும் வங்கிகள் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்யும்.

சாமானிய மக்களே அரசின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையின் இறுதி பலன் எப்படி இருக்கும் என்று என்னால் இப்போது கணிக்க முடியவில்லை.

'எதிர்கால நலனுக்கான திட்டமல்ல'

ரூ.500,1000 செல்லாது என்ற நோட்டு நடவடிக்கை எதிர்காலத்தில் நல்ல விளைவை ஏற்படுத்தும் என்று ஆளுங்கட்சி கூறிவருகிறது. அவ்வாறாக இது நீண்டகால நலனுக்கான திட்டம் என்று கூறுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஜான் கென்னியின் வார்த்தைகள்: "நாட்கள் நகர நாம் அனைவரும் செத்து மடிவோம்" என்பதே அது" என்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x