Published : 24 Aug 2014 07:40 PM
Last Updated : 24 Aug 2014 07:40 PM

மகாராஷ்டிர ஆளுநர் திடீர் ராஜினாமா: மிசோரமுக்கு மாற்றியதால் அதிருப்தி

மிசோரமுக்கு இடமாற்றம் செய்யப் பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மகாராஷ்டிர ஆளுநர் கே.சங்கர நாராயணன், தன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்றவுடன், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சில ஆளுநர்களை பதவி விலக வலியுறுத்தியது.

மத்திய உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பதவி விலகும் படி கோரியதாகக் கூறப்பட்டது.

இதையேற்று சிலர் பதவி விலகினர். அப்போது, மகாராஷ்டிர ஆளுநர் கே.சங்கரநாராயணன், “ஜனநாயகத்தில் எந்தப் பதவியும் நிரந்தரமானதல்ல. உரிய அதிகாரம் மிக்க நபர் (குடியரசுத் தலைவர்) கோரினால் உடனடியாக பதவி விலகுவது குறித்து பரிசீலிப்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சங்கரநாராய ணனை மிசோரம் ஆளுநராக இடமாற்றம் செய்து, குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து சனிக் கிழமை இரவு அறிவிப்பு வெளி யானது. ஆனால், இந்த இடமாற்றத் தால் அதிருப்தியடைந்த சங்கர நாராயணன் ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டேன். மிசோரம் செல்வது என் னால் இயலாத காரியம். நான் முழு நேர அரசியலுக்கு திரும்புவேன்.

மிசோரம் இடமாற்றம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா என்பதில் நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஊடகங்கள்தான் கூறவேண்டும். எதிர்காலத்தில் ஆளுநர்களுக்கு உரிய கவுரவம் அளிக்கப்பட வேண்டும்.

ஜனநாயக நடைமுறையில், எந்த அரசும் நிரந்தரமானதல்ல; எந்த பதவியும் நிரந்தரமானதல்ல. அவை மாறிக்கொண்டே இருக்கும். எல்லாவற்றையும்விட ஜனநாயகம் உயர்வானது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

அவரது ராஜினாமா அறிவிப்புக்கு முன்னதாக ‘தி இந்து’ சார்பில் அவரைத் தொடர்பு கொண்டபோது, “கட்சித் தலைவர் சோனியாவிடம் ஆலோசித்த பின் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

சங்கரநாராயணனுக்கு வரும் 2017-ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ளது.

இதற்கிடையே குஜராத் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x