Published : 03 Mar 2015 10:11 PM
Last Updated : 03 Mar 2015 10:11 PM

மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சிக்கு தடை: ட்விட்டரில் பாஜக-வுக்கு எதிராக கொந்தளிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் உத்தரவையடுத்து ட்விட்டரில் பலரும் ஆதரித்தும், எதிர்த்தும் கொந்தளிப்புடன் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இம்மாநிலத்தில் பசுக்களை கொல்வதற்கு தடை விதித்து 1976-ம் ஆண்டு ‘மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டம்’ இயற்றப்பட்டது. என்றாலும் எருதுகள் மற்றும் காளைகளை கொல்வதற்கு, தகுதிச் சான்றின் அடிப்படையில் அனுமதி தரப்பட்டு வந்தது.

இந்நிலையில் 1995-ம் ஆண்டு பாஜக – சிவசேனா ஆட்சியின்போது, மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி பசுக்கள் மட்டுமின்றி, எருதுகள் மற்றும் காளைகளை கொல்வதற்கும் தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி வழங்கியுள்ளதாக மகாராஷ்டிர ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அனுப்பியுள்ளது.

இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் பசுக்கள், காளைகள் மற்றும் எருதுகள் இறைச்சிக்கான தடை அமலுக்கு வந்துள்ளது.

என்றாலும் எருமைகள் இறைச்சிக்கு இந்த சட்டம் அனுமதி வழங்குகிறது. குறைந்த தரம் கொண்டதாக கருதப்படும் எருமை இறைச்சி, இம்மாநிலத்தில் மொத்த இறைச்சி விற்பனையில் 4-ல் ஒரு பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் மகாராஷ்டிரத்தில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என்றும் பிற இறைச்சிகளின் விலை உயரும் என்றும் மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவருக்கு நன்றி. பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவேண்டும் என்ற எங்கள் கனவு இப்போது நிதர்சனம் ஆகியுள்ளது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x