Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM

‘பேஸ்புக்கில் அவதூறு பிரச்சாரம்: மும்பை போலீஸில் ஆமிர் கான் புகார்

சமூக வலைதளமான பேஸ்புக்கில் தனக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக இந்தி நடிகர் ஆமிர் கான் மும்பை காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

மும்பை காவல் துறை ஆணையர் ராகேஷ் மரியா, இணை கமிஷனர் (சட்டம் - ஒழுங்கு) சதானந்த் தத்தே ஆகியோரை ஆமிர் கான் சனிக்கிழமை சந்தித்தார். அப்போது இப்புகார் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். சைபர் பிரிவு போலீஸார் இப்புகாரை விசாரிப்பார்கள்.

2012-ல் ஸ்டார் பிளஸ் சேனலில் ஆமிர் கானின் “சத்யமேவ ஜயதே” நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பெண் சிசுக்கொலை, குடும்ப வன்முறை போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளை அலசும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 2-வது பாகம் (சீசன் 2) ஸ்டார் சேனல்களில் கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கியது. அதிகரிக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான இந்த அலசலில், காவல்துறை மீது விமர்சனங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்ச்சி இறுதியில் வழக்கம்போல் சமூகப் பணிகளுக்காக பொதுமக்களிடமிருந்து ஆமிர் கான் நிதியுதவி கோரியிருந்தார்.

இந்நிலையின் “இவ்வாறு பெறப்படும் நிதி, மசூதிகள் கட்டுவதற்கும், இஸ்லாமிய இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் பயன்படுத்தப்படுவதாக பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது” என ஆமிர் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

“இது முற்றிலும் தவறானது. அடிப்படையற்றது. புகார் கூறப்படும் மனிதநேய அறக்கட்டளை மேற்கு வங்க மாநிலம் ஹான்ஸ்புகூரில் உள்ளது.

இதை அஜய் மிஸ்ட்ரி என்பவர் தனது தாயார் நினைவாக நடத்துகிறார். ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பணிகளை அவர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். எனவே இந்த அவதூறு பிரச்சாரத்தை பொதுமக்கள் நம்பவேண்டாம்” என ஆமிர் கான் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x