Published : 28 Jun 2015 05:51 PM
Last Updated : 28 Jun 2015 05:51 PM

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: மோடி விடுத்த மகளுடன் செல்ஃபி அழைப்புக்கு மகத்தான வரவேற்பு

நாட்டில் பாலின விகித மாறுபாட்டை சரிசெய்வதற்காக, பெண் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'மகளுடன் செஃல்பி' என்ற பிரதமர் மோடியின் அழைப்புக்கு இணையத்தில் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது.

மனதின் குரல் (மன் கி பாத்) என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன் வரிசையில், அவரது உரை நாடு முழுவதும் இன்று ஒலிபரப்பப்பட்டது.

அதில், நாட்டில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது என்பதால், பெண் சிசுவைக் காப்பாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் அவர் அழைப்பு விடுத்தார்.

மகளுடன் செல்ஃபி

அவர் மேலும் கூறும்போது, "நாட்டின் குறிப்பிட்ட 100 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது கவலை அளிக்கிறது. குறிப்பாக ஹரியாணா மாநிலத்தில் இந்த சமூக அவலம் அதிகமாக உள்ளது. எனவே பெண் சிசுவைக் காக்க நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

இதுதொடர்பாக பிரமாண்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக, ஹரியாணாவில் உள்ள கிராமப் பஞ்சாயத்து ஒன்றில் மேற்கொண்ட பிரச்சார முயற்சி வரவேற்கத்தக்கது. அதைப் போலவே பெற்றோர்களாகிய நீங்களும் உங்கள் மகள்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து > #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் உடன் ட்விட்டரில் பகிருங்கள். அவற்றை நான் மகிழ்ச்சியுடன் ரீட்வீட் (பகிர்தல்) செய்வேன். எதிர்வரும் ரக்சா பந்தன் திருவிழாவுக்கு நமது சகோதரிகளின் நலன்களில் அக்கறை காட்டுவது அவசியம்" என்றார் பிரதமர் மோடி.

உலக அளவில் சிறப்பிடம்

மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பட்டவுடன், மோடி விடுத்த 'மகளுடன் செல்ஃபி' அழைப்புக்கு ட்விட்டரில் மகத்தான வரவேற்பு கிடைத்தது. >#SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் இட்டு, பெற்றோர் பலரும் தங்கள் மகள்களுடனான புகைப்படங்களைப் பகிர்ந்தவண்ணம் உள்ளனர். அவற்றில் பலவும் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதனால், இந்தப் பிரச்சார உத்திக்கு ட்விட்டரில் படுவேகமாக வரவேற்பு கிடைத்தது. நிமிடத்துக்கு 20-க்கும் மேற்பட்ட போஸ்டுகள் பகிரப்பட்டதன் விளைவாக, #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் நீண்ட நேரம் நீடித்தது.

இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் டாப்பில் இருந்த இந்த ஹேஷ்டேக் மெலும் மேலும் வரவேற்பு பெற்று, உலக அளவிலான ட்ரெண்டிங்கிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பிடம் பெற்றதும் கவனிக்கத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x