Published : 29 Apr 2015 01:16 PM
Last Updated : 29 Apr 2015 01:16 PM

பெங்களூரு சாலைகளில் நுரையாய் பொங்கிய கழிவு நீர்: வர்தூர் ஏரி வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது

அதிகரித்து வரும் தொழிற்சாலை கள் மற்றும் நகரமயமாக்கலின் விளைவாக பெங்களூருவிலிருந்து வெளியேறும் கழிவு நீர், வர்தூர் ஏரியில் கலந்ததால் சாக்கடைகளில் மலைபோல நுரை பொங்கியது. இந்த கழிவு நீர் வர்தூர் ஏரியிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கலந்து தமிழகத்துக்குள் நுழைவது தெரியவந்துள்ளது.

நாட்டின் தகவல் தொழில்நுட் பத்துறை தலைநகராக விளங்கும் பெங்களூரு, கடந்த சில ஆண்டு களில் அதிவேக வளர்ச்சி அடைந் துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், நகர மயமாக்கலின் காரணமாக பெருகி யுள்ள வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றி லிருந்து 1,400 மில்லியன் லிட்டர் கழிவு நீர் வெளியேறுகிறது.

இதில் 500 மில்லியன் கழிவு நீர் சாக்கடைகள் மூலமாக பெங்களூருவின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வர்தூர் ஏரியில் கலக்கிறது. மீதமுள்ள கழிவு நீர் அர்க்காவதி உள்ளிட்ட துணை ஆறுகளுடன் கலந்து காவிரி ஆற்றில் இணைகிறது. இந்த நீர் மேகேதாட்டு, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கலில் தமிழகத் துக்குள் நுழைகிறது. வர்தூர் ஏரியில் கலக்கும் கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து கொடி ஆழம் என்ற இடத்தில் தமிழகத்தில் நுழைகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிகப்படியான கழிவு நீர் சாக்கடைகளில் ஓடுவதால் ஆங்காங்கே நுரை மலைபோல குவிந்திருக்கும். நேற்று வர்தூர் ஏரியில் கழிவு நீர் கலந்ததால் ஏரி பொங்க ஆரம்பித்தது. இதனால் சாக்கடைகளில் நுரை மலை உருவாகி சாலையில் தேங்கிய‌து. இதனால் பல இடங்களில் வாகனங்கள் சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது தொடர்பாக பெங்களூரு வைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் கேட்டபோது, ‘‘பெங்களூரு மாநகரம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வீடுகளிலிருந்து வெளியேறும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீரை முறையாக பயன்படுத்துவது தொடர்பான கட்டமைப்பு இதுவரை உருவாக் கப்படவில்லை. கழிவு நீரில் பெரும்பாலும் டிடர்ஜென்ட் கழிவு களும், கழிப்பறை கழிவுகளும் ஒன்றாக கலப்பதால் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு நுரையாக பொங்குகிறது.

இந்தக் கழிவு நீர் வர்தூர் உள்ளிட்ட ஏரிகளில் நேரடியாக கலப்பதால் ஏரியும் நுரையாக பொங்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நச்சுக் கழிவுகள் தொடர்ந்து ஏரியில் கலப்பதால் அங்குள்ள நீர்வாழ் உயிரினங்கள் முற்றிலுமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கழிவு நீரின் துர்நாற்றம் காற்றில் கலப்பதால் அதனை சுவாசிப்போருக்கும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த கழிவு நீரானது காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கலப்பதால் அந்த நீரை குடிநீராகப் பயன்படுத்தும் பெங்களூரு, தமிழ்நாடுவாழ் மக்களுக்கு கொடிய நோய்கள் ஏற்படும்'' என்றனர்.

இதுகுறித்து கர்நாடக சிறு பாசனத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகியிடம் கேட்டபோது, ‘‘பெங்களூருவில் இருந்து வெளி யேறும் கழிவு நீரை சுத்திகரித்து மறு பயன்பாட்டுக்கு விடுவது குறித்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதேபோல ஏரி வளர்ச்சி ஆணையம் புதிதாக தொடங்கப்பட்டு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பது, கம்பி வேலி அமைப்பது, கழிவு நீர் கலப்பது ஆகியவை ஒழுங்குபடுத்தப்படும்.

பெங்களூருவின் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வறட்சி மாவட்டங்களான பெங்களூரு ஊரகம், கோலார், சிக்பள்ளாபூரு மாவட்டங்களில் உள்ள ஏரிகளை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கழிவு நீர் இரண்டு கட்டங்களாக சுத்தகரிப்பு செய்யப்படும். இந்த நீர் கோலார் மாவட்டத்தில் உள்ள 108 ஏரிகளுக்கும், சிக்பள்ளாபூருவில் உள்ள 32 ஏரிகளுக்கும் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x