Last Updated : 22 Feb, 2017 08:30 AM

 

Published : 22 Feb 2017 08:30 AM
Last Updated : 22 Feb 2017 08:30 AM

பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு சசிகலாவை மாற்றுவதை அனுமதிக்க முடியாது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா திட்டவட்டம்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அங்கிருந்து தமிழக சிறைக்கு மாற்றுவதை அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறினார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த 15-ம் தேதி அடைக்கப்பட்டனர். சசிகலா கோரிய பல வசதிகள் சிறையில் அவருக்கு வழங்கப்படவில்லை. அவரை சந்திக்க வரும் வழக்கறிஞர்கள், உறவினர்கள், கட்சியினரிடம் சிறைத்துறை கண்டிப்புடன் நடந்துகொள்கிறது. இதற்கிடையில், பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வ‌ழக்கறிஞர் ஆச்சார்யா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

சிறைத்துறை விதிகளின்படி கைதியை ஒரு மாநிலத்துக்குள் மாற்றுவதானால், சம்பந்தப்பட்ட சிறை உயரதிகாரிகள் முடிவெடுக்க லாம். வேறு மாநிலம் என்றால் இரு மாநில அரசுகள், சிறைத் துறை அதிகாரிகள் கலந்துபேசி முடிவெடுப்பார்கள். ஆனால், உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்பதால், அதுபோன்ற நடை முறைகள் சசிகலாவுக்கு பொருந் தாது. அரசியல் காரணங்களால் தான் இந்த வழக்கு தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது. இவ்வழக்கில் அரசியல் கட்சிகளின் நேரடி தொடர்பு இருப்பதால் சசிகலாவை அவ்வளவு எளிதாக தமிழக சிறைக்கு மாற்ற முடியாது. உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றே மாற்ற முடியும்.

மேலும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கும் சூழலில், அக்கட்சி யின் பொதுச் செயலாளரான சசிகலாவை அங்குள்ள சிறைக்கு மாற்றினால், சரியாக தண்டனை அனுபவிப்பாரா என்பது சந்தேகமே. எனவே, இதை அனுமதிக்க முடியாது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டால், சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திமுகவும் எதிர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் 3-ம் தரப்பான திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் தரப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி சிங் கூறும்போது, ‘‘ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் மட்டுமே உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனையை அனுபவிப்பார். தமிழகத்துக்கு மாற்றினால், சிறையை விருந்தினர் மாளிகையாக மாற்றிவிடுவார்கள். அங்கு சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வார். நீதிமன்ற தண்டனை, காற்றில் பறக்கவிடப்படும். நீதியையும், தண்டனையையும் நிலைநாட்டும் வகையில் அவர் பெங்களூரு சிறையில்தான் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள திஹார் சிறைக்கு மாற்றலாம் என திமுக சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x