Last Updated : 26 Feb, 2017 10:19 AM

 

Published : 26 Feb 2017 10:19 AM
Last Updated : 26 Feb 2017 10:19 AM

பெங்களூரு சிறையில் இருந்தபடி கட்சியை சசிகலா நடத்த முடியுமா? - லாலு போல் செயல்பட முடியாது என பிஹார்வாசிகள் கருத்து

லாலு பிரசாத் யாதவ், சிறையில் இருந்தபடி கட்சியை நடத்தியது போல, தற்போது அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவால் செயல்பட முடியாது என பிஹார்வாசிகள் கூறுகின்றனர்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு, பிஹார் முதல்வராக இருந்தபோது, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கினார். இதில் கடந்த 1997, ஜூலையில் முதல்வர் பதவியை அவர் இழக்க நேரிட்டபோது, தனது மனைவி ராப்ரி தேவியை அப்பதவியில் அமர வைத்தார். ராப்ரி பெயரளவில் முதல்வராக இருக்க, லாலு சிறையில் இருந்தபடி அரசையும் கட்சியையும் இயக்கினார். இதுபோல் சசிகலாவால் சிறையில் இருந்தபடி செயல்பட முடியாது என பிஹார்வாசிகள் கருதுகின்றனர். இதற்கு தற்போதுள்ள ஊடக வளர்ச்சியும் பொதுமக்களின் விழிப்புணர்வும் காரணமாகக் கூறுகின்றனர்.

லாலு மீதான ஊழல் வழக்கில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், அவர் பாட்னாவில் உள்ள பியூர் மத்திய சிறையில் தள்ளப்பட்டார். இங்கு வெறும் மூன்று நாட்கள் இருந்த லாலுவை பிஹார் அரசு பாதுகாப்பு காரணங்களை கூறி, புல்வாரி சிறைக்கு மாற்றியது. தலைநகர் பாட்னாவில் இருந்து 15 கி.மி. தொலைவில் உள்ள புல்வாரியில், ‘பிஹாரி மிலிட்டரி போலீஸ்’ எனும் சிறப்பு படையின் முகாமை, ‘கேம்ப் ஜெயில்’ ஆக மாற்றியது.

பிஹாரில் ஆளும் அரசும் லாலுவுடையது என்பதால் இது சாத்தியமானது. புல்வாரியில் சிறையின் பெயரால் செய்யப்பட்ட மாற்றங்களை, இப்போது எந்த அரசாலும் செய்ய முடியாது என்றே கூறலாம். லாலுவின் சமையல்காரர் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை என சகல வசதிகளுடன் ஒரு விருந்தினர் மாளிகையாக அந்த சிறை இருந்தது. இங்கிருந்தபடி லாலு, மாநில அரசையும் கட்சியையும் நிர்வகித்து வந்தார். ராப்ரி ஒப்புதல் அளிக்க வேண்டிய கோப்புகளுடன் லாலுவை காண அதிகாரிகள் அன்றாடம் வரிசையில் நின்றனர். கட்சி நிர்வாகிகளும் கட்சி விவகாரங்கள் தொடர்பாக லாலுவை சந்தித்து வந்தனர். இங்கு அதிகாரப்பூர்வமற்ற பத்திரிகையாளர் சந்திப்பையும் லாலு அவ்வப்போது நடத்தத் தவறவில்லை.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பிஹாரின் மூத்த பத்திரிகையாளர் சுசில்குமார் பாதக் கூறும்போது, “லாலுவை போலவே சசிகலாவுக் கும் அவரது கட்சியின் ஆட்சியும் பெயரளவிலான முதல்வரும் அமைந்துள்ளதாகக் கருதப்படுகி றது. பெங்களூரு சிறையில் இருப் பவரை தமிழகத்துக்கு மாற்ற இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகளை பார்க்கிறோம். இது லாலுவின் காலம் போல் சாத்திய மல்ல. ஏனெனில் தற்போது டி.வி. சேனல்கள் பல்கிப் பெருகியுள்ளன. சமூக வலைதளங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். மக்களவை தேர்தல் தோல்வியால் நிதிஷ்குமார் பதவி விலகியபோது, லாலுவை போலவே பெயரளவு முதல்வராக மாஞ்சியை அமர்த்தினார். ஆனால் மாஞ்சியை நிதிஷ்குமார் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை” என்றார்.

பாட்னாவின் சிபிஐ நீதிமன்றம் லாலுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டபோது, 4 கி.மீ. தொலை வுள்ள சிறைக்குச் செல்ல, லாலு 8 மணி நேரம் எடுத்துக்கொண்டார். மேளதாளம் முழங்க ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களுடன் பியூர் சிறைக்கு ஊர்வலமாக சென்றார். இதற்கு விளக்கம் கேட்டும் பிஹார் அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

3 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையானபோதும், புல்வாரியில் இருந்து கிளம்பிய லாலு யானை மீது சவாரி செய்தபடி மாபெரும் ஊர்வலமாக, ராப்ரியின் முதல்வர் பங்களாவுக்கு வந்தார். வழக்கில் பலமுறை விசாரணைக்கு ஆஜராகும்போதுகூட, சைக்கிள் ரிக் ஷாவில் ஊர்வலமாக செல்வது உட்பட மக்கள் ரசிக்கும்படியான சேட்டைகள் செய்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x