Published : 17 Feb 2017 08:32 AM
Last Updated : 17 Feb 2017 08:32 AM

பெங்களூருவில் சசிகலா தரப்பு வாகனத்தை தாக்கியவர்கள் யார்? - பத்திரிகையாளர்களா? பன்னீர்செல்வம் ஆதரவாளர்களா?

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைய வந்தனர்.

சிறை வளாகத்தை நெருங்கும் போது சசிகலாவுடன் வந்த வாகனங்களை மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். இதில் அதிமுக நிர்வாகிகள், சசிகலாவின் உற வினர்கள் வந்த 7 வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. ஓட்டுநர் உட்பட 3 பேர் காயமடைந் தனர். இதையடுத்து போலீஸார் நடத்திய தடியடியில் பத்திரிகை யாளர்கள் 3 பேர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பத்திரிகையாளர் பாக்கிய பிரகாஷ் கூறும்போது, “கர்நாடக எல்லையில் சசிகலாவின் வாகனம் நுழைந்த போது கன்னட டிவி சேனல் ஒன்றின் பத்திரிகையாளர்கள் அதனைப் பின் தொடர்ந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இரு வாகனங்கள் லேசாக உரசிக் கொண்டதால் ஓட்டுநர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்துக்கு பிறகு சமரசம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சிறை வளாகத்தை சசிகலாவின் வாகனம் நெருங்கிய போது அதிமுகவினர் சிலர், சசிகலாவுக்கு எதிராக கோஷம் போட்டனர். அப்போது சில இளைஞர்கள் சசிகலா ஆதரவாளர்களின் வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பதற்றமடைந்த ஒரு வாகனம் என் மீது லேசாக மோதிவிட்டது. இந்த தாக்குதலில் கன்னட பத்திரிகையாளர்கள் யாரும் ஈடுபடவில்லை” என்றார்.

சசிகலாவுக்கு எதிரான கோஷம்

இதுகுறித்து கர்நாடக அதிமுக வினர் கூறும்போது, “சிறையை நெருங்கும் போது சசிகலாவுக்கு எதிராக சிலர், கோஷம் போட்டனர். இதனால் சசிகலாவின் ஆதர வாளர்களுக்கும் அவர்களுக் கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சில பத்திரிகையாளர் களின் தூண்டுதலால் உள்ளூர்க் காரர்கள் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களைத் தாக்க ஆரம்பித்தனர். இதில் சசிகலா வின் உடை, மருந்துகள் கொண்டு வரப்பட்ட வாகனமும் சேதமடைந் தது. ஆனால் போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை” என்றனர்.

இதுகுறித்து அங்கிருந்த போலீ ஸார் கூறும்போது, “தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அதுவும் சசிகலா உடன் வந்த வாகனங்கள் மட்டும் தாக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி யுள்ளது. தமிழ் மொழியை பேசியவர்களே அங்கு அதிகள வில் கூடியிருந்தனர். இந்த தாக்கு தல் தொடர்பாக பத்திரிகையாளர் களிடம் விசாரித்த போது, அதை நாங்கள் செய்யவில்லை. சசிகலா வின் ஆதரவாளர்கள் செய்தார் கள் என்பதை உறுதியாக சொல்கின்றனர். பெங்களூருவில் சசிகலாவின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி தமிழக சிறைக்கு மாற்ற கோருவதற்காக இந்த சதித் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்றனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெங்களூரு மாநகர துணை காவல் ஆணையர் போரலிங்கைய்யா கூறும்போது, “தாக்குதல் தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. எனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.ஆனால் பத்திரிகையாளர்கள் சிலர் தானாக முன்வந்து தங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என விளக்கம் அளித்தனர். அதிமுகவினர் எங்களிடம் புகார் அளித்தால், முறையான விசாரணை நடத்தப்படும்” என்றார்.

பரப்பன அக்ரஹாராவில் சசிகலா நுழைந்தபோது திடீரென அரங்கேறிய தாக்குதலின் உண்மையான காரணம் தெரியா மல் உளவுத்துறை குழம்பிப் போய் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x