Last Updated : 25 Sep, 2015 03:44 PM

 

Published : 25 Sep 2015 03:44 PM
Last Updated : 25 Sep 2015 03:44 PM

புதிய தொழில் துறைகளில் தலைதூக்கும் புதிய முறை கொத்தடிமை

தடை செய்யப்பட்ட கொத்தடிமை முறை வேளாண் துறையிலிருந்து, துரித உணவு விடுதிகள், மற்றும் கார்பெட் தயாரிப்புத் துறைகளில் தலைதூக்கியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அதாவது தடை செய்யப்பட்ட கொத்தடிமை முறை புதிய வடிவங்களில் நம்மிடையே இன்னமும் நிலவுகிறது என்று கூறுகிறது ஆய்வு ஒன்று. கர்நாடக மாநிலத்தில் இத்தகைய நடைமுறையை கண்டறிய நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 7,646 பேர் இன்னமும் வலுக்கட்டாயமாக வேலையில் ஈடுபடுத்தப்பட்டு கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்தக்குழுவின் தலைவர் பத்திரிகையாளர் சிவாஜி கணேசன் என்பவராவார். இவர் அம்மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீலிடம் 84 பக்க ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளார்.

2013-ம் ஆண்டு கொத்தடிமைகள் நலனை மீட்பதற்காகச் செயல்படும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஜீவிகா அமைப்பு அளித்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொத்தடிமைகள் வேளாண் துறையில் காணப்படுவர், தற்போது, காபி தோட்டங்கள், துரித உணவகங்கள், கார்பெட் தயாரிப்பு நிலையங்கள், செங்கற் சூளைகள், கல்குவாரிகள் மற்றும் பீடிசுற்றும் தொழில்துறைகளில் கொத்தடிமை முறை புதிய வகையில் தலைதூக்கியுள்ளது.

இந்த புதிய வடிவ கொத்தடிமை முறையில், முதலாளிகள் தொழிலாளிகளுக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்து விடுவர், பிறகு அவர்களை மாதக்கணக்கில் வேலை செய்யக் கோருவர். அதாவது ஓய்வின்றி, தினகூலியின்றி வேலை. இந்த ஆய்வு கண்டுபிடித்ததன் படி, தொழிலாளர்கள் ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரையில் அட்வான்ஸ் பெற்று மாதக்கணக்கில் கொத்தடிமைகளாக ஓய்வின்றி கூலியின்றி உழைத்து வருவது தெரியவந்தது. சில சந்தர்பங்களில் இவர்கள் இருப்பிடங்களை விட்டுச் செல்ல அனுமதியும் இல்லை.

ஜீவிகா அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் படி, பிதார் மாவட்டத்தில் 1,357, மைசுருவில் 830, ஹசனில் 827, சிக்பல்லபூரில் 607, ரைச்சூரில் 469 கொத்தடிமைகள் உள்ளனர். இந்த மாவட்டங்களின் உதவி ஆணையர்கள் சரியான தரவுகளை அளிக்க மறுப்பதோடு, கொத்தடிமைகளை விடுவிப்பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் பாட்டீல் 2 மாதங்களில் இவர்களை விடுவிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

மறுவாழ்வளிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கான உதவித் தொகை ரூ.300லிருந்து ரூ.1000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கமிட்டியின் கண்டுபிடிப்புகள்:

அடிமை முறை அதன் வடிவத்தில் மாறியுள்ளது.

திருமணச் செலவுகள் கடுமையாக அதிகரித்தல், மருத்துவச் செலவுகளை சந்திக்க முடியாத நிலை, வறுமை, வேலைவாய்ப்புகளின்மை ஆகியவையே கொத்தடிமைகளை உருவாக்குகிறது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் இதில் சிக்கியுள்ளனர்.

மாவட்ட, தாலுகா மட்ட நிர்வாகம் இந்த புதிய கொத்தடிமை முறையை மறுப்பதோடு, அலட்சியப் போக்கை கடைபிடித்து வருகிறது.

அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படுவது அவசியம்.

கண்காணிப்பு கமிட்டி செயல்படவில்லை.

கொத்தடிமைகளாக தொழிலாளர்களை வைத்துள்ளவர்கள் மீது கிரிமினல் வழக்கு எதுவும் தொடரப்படவில்லை.

பல இடங்களில் மறுவாழ்வு திருப்தியளிக்கும் விதத்தில் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x