Last Updated : 18 Aug, 2015 11:40 AM

 

Published : 18 Aug 2015 11:40 AM
Last Updated : 18 Aug 2015 11:40 AM

பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா காலமானார்: பிரதமர் நரேந்திர மோடி, சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யின் மனைவி சுவ்ரா முகர்ஜி நேற்று காலமானார். 74 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் வேணு ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உடல் நலக் குறைவு காரணமாக ராணுவ மருத்துவ மனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா , நேற்று காலை 10.51 மணிக்கு உயிரிழந்தார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்ட தையடுத்து, கடந்த 7-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது.

தற்போது வங்கதேசத்தில் உள்ள ஜெஸ்ஸோர் பகுதியில் 1940 செப் டம்பர் 17-ம் தேதி சுவ்ரா பிறந்தார். அவருக்கு 10 வயதானபோது, அவரது குடும்பத்தினர் கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்தனர். 1957-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பிரணாப் முகர்ஜிக்கும் சுவ்ராவுக்கும் திருமணமானது. இத்தம்பதிக்கு அபிஜித், இந்திரஜித் என்ற இரு மகன்களும், சர்மிஷ்டா என்ற மகளும் உள்ளனர். இதில் அபிஜித் காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார்.

ரவிந்தரநாத் தாகூரின் தீவிர ரசிகையான சுவ்ரா, அவரது பாடல், கவிதைகளை பல்வேறு நிகழ்ச்சிகளாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அரங்கேற்றியுள்ளார். ‘கீதாஞ்சலி ட்ரூப்’ என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கி, தாகூரின் தத்துவங்களை அவரின் பாடல்கள், நாட்டியம், நாடகங்கள் மூலமாக பரப்பி வந்தார்.

இசைப்பிரியரான சுவ்ரா, மிகச்சிறந்த ஓவியரும்கூட. தனியாகவும், சிலருடன் இணைந்தும் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் மேற்கொண்ட நேர்காணலை ‘சோக்கர் அலோய்’ என்ற பெயரிலும் சீன சுற்றுப்பயணத்தை, ‘சேனா அசெனாய் சின்’ என்ற பெயரிலும் புத்தகங்களாக எழுதியுள்ளார்.

இன்று இறுதிச் சடங்கு

சுவ்ராவின் உடல் குடியரசுத் தலைவர் மாளிகையில், அவரின் படிக்கும் அறைக்கு எதிரே உள்ள ஏடிசி அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பிரமுகர்கள் அவரிடன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். சுவ்ராவின் இறுதிச் சடங்கு லோதி சாலையில் உள்ள மயானத்தில் இன்று நடைபெற வுள்ளது.

மகன் அபிஜித்தின் அதிகாரப்பூர்வ இல்லமான, எண் 13, தல்கடோரா சாலையில் இருந்து, இறுதிச் சடங்குக்கு எடுத்துச் செல்லப்படும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பிரணாப் அமைச்சராக இருந்த போது இந்த வீடு அவர்களுக்கு ஒதுக்கப் பட்டது. இந்த வீட்டில் சுவ்ரா அதிக காலங்களைச் செலவிட்டுள்ளார்.

தலைவர்கள் இரங்கல்

சுவ்ரா முகர்ஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“குடியரசுத் தலைவரின் கையறு நிலையில் தேசத்துடன் இணைந்து, துணைக் குடியரசுத் தலைவரும் இரங்கல் தெரிவிக்கிறார்” என துணைக் குடியரசுத்தலைவர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

“சுவ்ரா முகர்ஜி காலமானதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். கலை, கலாச்சாரம், இசைப்பிரியராக சுவ்ரா என்றும் நினைவுகூரப்படுவார்.” என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரணாப் முகர்ஜிக்கு எழுதி யுள்ள கடிதத்தில், “உங்கள் நேசத்துக்குரிய மனைவி சுவ்ரா காலமான தகவலறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

இந்த துக்க நிகழ்வில், என்னுடன் என் மனைவியும் சேர்ந்து இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார். இந்த பேரிழப்பைத் தாங்கும் துணிவையும், மனோதிடத்தையும் அந்த இறைவன் உங்களுக்கு அருளட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

“இந்த துயரமான தருணத்தில், நானும், காங்கிரஸும் ஒட்டுமொத்த தேசமும் பிரணாப் முகர்ஜியின் குடும்பத்துக்கு துணை நிற்போம்” என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் சுவ்ரா முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x