Last Updated : 06 Mar, 2015 09:05 AM

 

Published : 06 Mar 2015 09:05 AM
Last Updated : 06 Mar 2015 09:05 AM

பிபிசி மீது நடவடிக்கை எடுப்பது பற்றி மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது: ராஜ்நாத் சிங் தகவல்

பாலியல் பலாத்கார குற்றவாளியின் பேட்டியை, பிபிசி நேற்று திடீரென ஒளிபரப்பியது. இதையடுத்து பிபிசி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் பற்றி மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளியான முகேஷிடம் பிபிசி நிறுவனம் பேட்டி எடுத்தது. வரும் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று ஒளிபரப்புவதற்காக, ‘இந்தியாவின் மகள்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் எடுத்தது. அதில் முகேஷ் சிங்கின் தரக்குறைவான பேட்டி இடம்பெற்றுள்ளது.

இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ஆவணப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு நேற்றுமுன்தினம் தடை விதித்தது. டெல்லி நீதிமன்றமும், ஆவணப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை மறு உத்தரவு வரும்வரை நீடிக்கும் என்று உத்தரவிட்டது.

எனினும், தடையை மீறி இங்கிலாந்தில் அந்த ஆவணப்படம் திடீரென நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இதனால் மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பலாத்கார குற்ற வாளியின் பேட்டியை ஒளிபரப்பிய, பிபிசி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் பற்றி அரசு ஆராய்ந்து வருகிறது. எல்லா வாய்ப்புகளையும் ஆலோசித்து வருகிறோம்’’ என்றார்.

உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ‘‘திஹார் சிறையில் குற்றவாளியிடம் பேட்டி எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன. விதிகளை மீறி ஆவணப்படம் தயாரித்த லெஸ்லி உட்வின் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி உள்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது’’ என்றனர்.

இந்தியாவில் ஒளிபரப்ப மாட்டோம் உள்துறைக்கு பிபிசி கடிதம்

‘‘சர்ச்சைக்குரிய ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்பும் திட்டம் இல்லை’’ என்று பிபிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பிபிசி அனுப்பி உள்ள கடிதத்தில், ‘‘இந்திய அரசின் உத்தரவுப்படி, பலாத்கார குற்றவாளியின் பேட்டியை இந்தியாவில் ஒளிபரப்ப மாட்டோம். அதுபோல் எந்தத் திட்டமும் இல்லை. எனினும், இங்கிலாந்தில் அந்த ஆவணப்படம் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது. இதை உள்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x