Last Updated : 20 Apr, 2016 07:42 AM

 

Published : 20 Apr 2016 07:42 AM
Last Updated : 20 Apr 2016 07:42 AM

பி.எப். புதிய விதிமுறையைக் கண்டித்து பெங்களூருவில் போராட்டம்: 5 பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) கணக்கில் உள்ள தொகையை வெளியில் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய விதிமுறையைக் கண்டித்து பெங்களூருவில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட வன்முறையின்போது, 5 அரசு பேருந்து, 2 போலீஸ் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

பிஎப் தொகையை வெளியில் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு புதிய அறிவிக்கையை வெளியிட்டது. இதையடுத்து பெங்களூரு ஆயத்த ஆடை நிறுவன ஊழியர் ச‌ங்கத்தின் சார்பில், மத்திய அரசைக் கண்டித்து நேற்று முன்தினம் பெங்களூரு - ஒசூர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பொம்மனஹள்ளி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து போலீ ஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட் டக்காரர்களை கலைத்தனர்.

பெங்களூரு ஸ்தம்பித்தது

இந்நிலையில் 2-ம் நாளாக நேற்றும் பெங்களூரு - ஒசூர், பெங்களூரு - மைசூரு, பீனியா - யஷ்வந்த்பூர் என அனைத்து பிரதான சாலைகளிலும் ஊழியர் கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

பெங்களூரு மாநகரத்துக்கு செல்லும் அனைத்து பிரதான சாலைகளிலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜாலஹள்ளியில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த 3 அரசு பேருந்துகள், போலீஸ் ஜீப் ஆகியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர்.

மேலும் ஹெப்பக்குடி காவல் நிலையத்தின் மீதும், அங்கிருந்த போலீஸாரின் வாகனங்கள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தி, தீயிட்டு கொளுத்தினர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதேபோல பீனியா, தும்கூரு, ராம்நகர் ஆகிய இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பொம்மனஹள்ளி அருகே 2 அரசு பேருந்துகள், 4 இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது.

போலீஸார் தடியடி நடத்தி யதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொழிலாளர் களின் கல்வீச்சில் 30-க்கும் மேற்பட்ட‌ போலீஸாரும், பத்திரி கையாளர்களும் படுகாயம் அடைந் த‌னர்.

பெங்களூரு மாநகரின் பிரதான பகுதிகளில் நடைபெற்ற சாலை மறியலில் வன்முறை வெடித்ததால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

பெங்களூருவில் இருந்து சென்னை, கோவை, மதுரை,மைசூரு, மங்களூரு, மும்பை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. மெட்ரோ ரயிலின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால், யஷ்வந்த்பூர் வழித்தடத்தில் மெட்ரோ ரயிலும் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை 7 மணிக்கு பிறகு போராட்டம் முழுமையாக போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x